விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘கோலி சோடா’ படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றிச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் மில்டன் பேசும் போது,
“பாண்டிராஜ் இல்லன்னா இந்த படமே கிடையாது, நடந்திருக்கவே நடந்திருக்காது.
இந்த படத்தோட கதைய பாண்டிராஜ் கிட்ட ஒரு நாள் சொன்னேன். என்னங்க இவ்வளவு நல்ல கதைய வச்சிக்கிட்டு சும்மா இருக்கீங்க…உடனே படத்தை ஆரம்பிங்கன்னு சொன்னாரு. ‘பசங்க’ படத்துல நடிச்ச பசங்க பொருத்தமா இருப்பாங்கன்னு, அவர்தான் இந்த நாலு பசங்களையும் வரச் சொல்லி அவர் ஆபீஸ்லயே ‘மெரீனா’ படத்தோட காஸ்டியூம்லாம் கொடுத்து என்ன வேணும்னாலும் கேளுங்க செய்யறன்னு சொன்னாரு.
அப்ப நீங்களே இந்த படத்தை தயாரிங்கன்னு அவர்கிட்ட கேட்டேன்.
உடனே அவர் தயாரிக்கணும்னா என்னங்க வேணும், காசுதான வேணும், நான் தர்றேன்…நீங்களே தயாரிப்பாளர் ஆகுங்கன்னு சொல்லி என்னை தயாரிப்பாளர் ஆக்கினாரு,” என்றார்.
அதன் பேசிய இயக்குனர் பாண்டிராஜ்,
“நான் எப்படி என்னோட முதல் படத்து கதைய வச்சிக்கிட்டு அலைஞ்சேனே, விஜய் மில்டனும் இந்த கதைய வச்சிக்கிட்டு அலைஞ்சிட்டிருந்தாரு.
இப்படி ஒரு கதைக்குக் கூட உதவி செய்யலன்னா அப்புறம் சினிமாவுல இருந்து என்ன பிரயோஜனம், அதான் இந்த படத்துக்கு உதவி செய்தேன்.
இயக்குனர்கள் கிட்டலாம் எல்லாருமே தயாரிப்பாளர்கள் ஆகணும்னு சொல்லிக்கிட்டிருக்கேன். இப்படித்தான் சுசீந்திரன் வந்தாரு, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் தயாரிக்கணும்னு சொன்னாரு. தயாரிப்பாளர் ஆனால், உனக்குன்னு ஒரு பேனர் கிடைக்கும்னு சொன்னன். நல்லது, கெட்டதுலாம் தெரிஞ்சிக்கலாம்னு சொன்னேன். அவரும் தயாரிப்பாளர் ஆனார்.
அப்புறமா ‘மூடர் கூடம்’ நவீன் வந்தாரு, அவர்கிட்டயும் அதேதான் சொன்னன். மூணாவதா, விஜய் மில்டன் வந்தாரு. இப்ப சிம்புதேவன், சீனு ராமசாமி சீக்கிரமே தயாரிப்பாளர் ஆகிடுவாங்க.
நான் தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து, என்னை தயாரிப்பாளரா ஆக்கிட்டாங்க. ‘பசங்க’ படம் மூலமா சசிகுமார் சார் எனக்கு செய்த பெரிய உதவியை, என்னால மத்தவங்களுக்கும் செய்யணும்னு நினைக்கிறேன்.
இந்த படத்தோட வெற்றி எல்லாமே விஜய் மில்டனுக்குதான் சொந்தம். நாங்கள்லாம் சின்னச் சின்ன எறும்பா இருந்தோம். வசனத்துக்குக் கிடைச்ச பெயர் கூட அவருக்குதான் சேரணும். நான் சின்னச் சின்ன கரெக்ஷன் சொன்னன், அவ்வளவுதான்.
நான் சொன்னதையெல்லாம் அவர் ஏத்துக்கிட்டாரு, பசங்கள நடிக்க வச்சதில இருந்து மத்த நடிகர்கள் வரைக்கும் நான் சொன்ன ஆலோசனையை ஏத்துக்கிட்டாரு. இந்த படத்துல நானும் ஒரு பங்கா இருக்கன்றது ஒரு சந்தோஷம், ” என பேசினார்.
