அடுத்த சூப்பர் ஸ்டாரா சிவகார்த்திகேயன் ?

super-star---sivkarthikeyan

‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று நடந்த பல சம்பவங்கள் பத்திரிகையாளர்களையும், சராசரி ரசிகர்களையும் அதிகமாகவே ஆச்சரியப்பட வைத்தது.

எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று யோசிக்க வைத்தது ? ஆனால், சிவகார்த்திகேயன் திட்டமிட்டேதான் இதை செய்கிறாரோ எனவும் கேட்க வைத்துள்ளது.

தனுஷ் நடித்துள்ள ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தை வாங்க யாருமே முன் வரவில்லை என மீடியாக்களில் செய்திகள் ஒரு பக்கம் வருகின்றன. ஆனால், தனுஷ் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்கும் ‘டாணா’ படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அட்வான்சாக வாங்க வினியோகஸ்தர்கள் முன் வருகிறார்கள் என்றும் மறுபக்கம் செய்திகள் வருகின்றன.

ஆனால், இவற்றையெல்லாம் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் வழக்கம் போலவே சிவகார்த்திகேயன் இருப்பார் என்று நினைத்தவர்களுக்கு நேற்று நடந்த விழா பேரதிர்ச்சியைத்தான் கொடுத்துள்ளது. சமகாலத்தில் பல வெற்றிகளையும், திறமையான நடிப்பையும் வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதியின் எளிமையும், எந்த பந்தா இல்லாத தன்மையும் பலரையும் கவர்ந்து வரும் வேளையில், சிவகார்த்திகேயனின் செயல்கள் ஆச்சரியப்பட வைப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.

நேற்று மேடையில் இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ் உட்பட பலர் பேசிய பேச்சுக்கள் இன்னும் உசுப்பேற்றுவதாகவே அமைந்துள்ளன.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசும் போது, “இன்றைய தலைமுறையின் சூப்பர் ஸ்டார் என சிவகார்த்திகேயனைக் கூறுகிறார்கள். அவருடைய படத்தைத் தயாரிப்பாதற்கு யாரிடமும் ஃபைனான்ஸ் வாங்க வேண்டிய அவசியமில்லை. வினியோகஸ்தர்களே படத்தைத் தயாரிப்பதற்கு ஆகும் தொகையை அட்வான்சாக கொடுக்க முன் வருகிறார்கள்.

இது போன்ற விஷயங்கள் ரஜினிகாந்த் அவர்களுக்குத்தான் நடந்துள்ளது. ஆனால், அவர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக சரியான தொகையை மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொண்டார்.

சிவகார்த்திகேயனும் அதை பின்பற்ற வேண்டும், ” என்று கேட்டுக் கொண்டார்.

கொஞ்ச நாளாக இந்த ‘சூப்பர் ஸ்டார்’ பேச்சு இல்லாமல் இருந்தது. அஜித், விஜய், சூர்யா இப்படி பலரையும் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்க ஆரம்பித்து அதன் பின் அவர்களே ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் ஒருவரே என விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

கேயார் ‘இன்றைய தலைமுறை சூப்பர்ஸ்டார்’ என பேசியதன் விளைவு இப்போது மீண்டும் இந்த விவாதம் ஆரம்பமாகியுள்ளது.

நேற்றே பல சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் இது விஷயமாக அவர்களது  கருத்துக்களை பகிர ஆரம்பித்தனர்.

80 – 90களில் ரஜினிகாந்த் மிக மிக உச்சத்தில் இருந்த போது தற்காலிக சூப்பர் ஸ்டார்களாக உருவானவர்கள்தான் ராமராஜன், ராஜ்கிரண், பிரபு தேவா ஆகியோர்.

அவர்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பை தக்க வைத்துக் கொள்ள தவறி விட்டார்கள்.

அந்த காலங்களில், தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும், வியாபார ரீதியில் படத்துக்குப் படம் சம்பளத்தையும், வியாபாரத்தையும் ரஜினிகாந்த் உயர்த்திக் கொள்ளவேயில்லை. அதுவும் திரையுலகினரிடையே அவருக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்தது.

இன்றும் ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டாராக’ இருக்கிறார் என்றால் அவருடைய எளிமையும், மக்கள் மத்தியில் தோன்றும் போது எந்த பந்தாவையும் வெளிப்படுத்தாதே காரணம். அவரும், தோல்விகளை சந்தித்திருக்கிறார். ஆனால் ‘பீனிக்ஸ்’ பறவை போல அதிலிருந்து எழுந்திருக்கிறார்.  ரசிகர்களிடம் தன்னை தனியாளாகக் காட்டிக் கொள்ளாமல், அவர்களுள் ஒருவராக தன்னை அவர் காட்டிக் கொண்டதே அதற்குக் காணரம்.

வெற்றி, வரும் போகும், எளிமை மட்டும் எப்போதும் கூடவே இருந்தால் ஏற முடியாத உயரத்தைக் கூடி எட்டி விடலாம்.

Read Previous

நான் ஹீரோவா, ஆர்ட்டிஸ்டா, ஸ்டாரான்னு தெரியாது ? – சிவகார்த்திகேயன்

Read Next

இளையராஜா ரசிகர் மன்றம் – ஏப்ரல் 5-ல் ஆரம்பம்…