நாங்களும் கூட்டத்தைக் கூட்டுவோமில்ல… – சந்தானம் திரட்டிய கூட்டம்

Vallavanukku Pullum Aayudham Audio Launch_00021தமிழ் சினிமாவில் எத்தனையோ கூட்டங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சமீப காலமாக கூட்டப்படும் கூட்டம் எதற்காக என்றே புரியவில்லை.

‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற போது, எண்ணற்ற ரசிகர்கள் கூடியதாலும், ‘பவுன்சர்கள்’ என்றழைக்கப்படும் அடியாட்களாலும் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இரு நாட்களுக்கு முன் அதே சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘அரிமா நம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும், ஏராளமான ரசிகர்கள் கூடியதால் பத்திரிகையாளர்கள், விருந்தினர்கள் என பலரும் உள்ளே செல்ல முடியாத நிலை எற்பட்டது.

நேற்று, சென்னை, தேவி திரையரங்கில் சந்தானம் நடித்துள்ள ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு பெரும் கும்பலே திரையரங்குக்குள் நுழைய முயன்றது. அங்கிருந்த திரையரங்கின் ஒரு கதவையும் உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே புகுந்தார்கள். வேறு ஒரு பக்கம் வழி இருந்தாலும், விழாவுக்கு வந்த திரையுலக் பிரமுகர்கள் அதே வழியிலேயே வரவைத்து, சந்தானத்திற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டினார்கள்.

ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் அதே திரையரங்குகளில் அமைதியாக நடந்து வந்த சூழ்நிலையில், தற்போது இப்படி நடக்க ஆரம்பித்துள்ளது திரையுலகினரையும், பத்திரிகையாளர்களையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நாம் விசாரித்தவரையில் விஜய் டிவியில் வர்ணனையாளர்களாக சந்தானம், சிவகார்த்திகேயன் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, அவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாம்.

சந்தானம் திரையுலகிற்குள் வந்து நகைச்சுவை நடிகராக வளர்ந்து, இன்று ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். ஆனால், அவருக்குப் பின்னால் திரையுலகிற்குள் வந்த சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திற்குள்ளேயே வசூல் ஹீரோவாக வளர்ந்துள்ளதால், அதைக் கண்டு சந்தானம் கொதித்துப் போய் உள்ளாராம்.

தனக்குப் பின்னால் வந்தவர் இப்படி பெரிய ஹீரோவாகும் போது, பல படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த நாம் ஏன் ஹீரோவாக மாறக் கூடாது என்று யோசித்துதான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக நடித்தாராம்.

‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் திரளாக வந்ததால், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அதை விடப் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று சந்தானம் முடிவெடுத்து, நேற்று தியேட்டர் வெளியில், அண்ணா சாலை வரை பலத்த கூட்டத்தைக் கூட்டிவிட்டார்.

இது எங்கே போய் முடியுமோ….என பத்திரிகையாளர்கள் தங்களுக்கள் முணுமுணுத்துக் கொண்டதைக் கேட்க முடிந்தது…

Read Previous

தெனாலிராமன் பிரச்சனை – பாரதிராஜா ஆதரவுக் குரல்

Read Next

இனி ‘ஒன்லி’ ஹீரோதான்… – சந்தானம் திடீர் முடிவு…