‘நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி,’ போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நேமிசந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் பட நிறுவனம் தற்போது ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் ‘மீகாமன்’ படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, ‘கழுகு’ கிருஷ்ணா, சுனைனா, ‘கோலி சோடா’ மதுசூதன், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடிக்க தமன் இசையமைப்பில் ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் ‘வன்மம்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் இயக்குனரான ஜெய் கிருஷ்ணா, பி.கலைமணி, கமல்ஹாசன், ஆர்.கே.செல்வமணி, சிம்பு போன்றவர்களிடம் பணி புரிந்தவர்.
படத்தைப் பற்றி இயக்குனர் ஜெய் கிருஷ்ணா கூறுகையில்,
‘வன்மம்’ என்ற வார்த்தைக்கு பல பொருள் இருக்கிறது. இது ஒரு உணர்வு சம்பந்தப்பட்ட படம். பகைமை, கோபம், பாசம் ஆகிய உணர்வுகளை இந்த படத்தில் சொல்லப் போகிறேன். பகைமையும், கோபமும் கொஞ்சம் தலை தூக்கி இருக்கும்.
ஒரு தனிப்பட்ட மனிதர் மீது நாயகனுக்கு உருவாகும் பகைமை, கோபம்தான் படத்தின் கதை. இதுல நட்புக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படம்தான். விஜய் சேதுபதி, இதுவரைக்கும் பண்ண படங்கள்ல இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டிருக்கும். அவருக்கு உண்டான ‘ஹீரோயிசம்’ காட்சிகள் படத்துல இருக்கு.
‘கழுகு’ கிருஷ்ணா இன்னொரு ஹீரோவா நடிக்கிறாரு. அவர் படத்துல இரண்டாவது ஹீரோலாம் கிடையாது. விஜய் சேதுபதிக்கும், அவருக்கும் சரிசமமான முக்கியத்தும் உண்டு. இரண்டு பேரும் படத்துல நண்பர்களா நடிச்சிருக்காங்க.
இரண்டு ஹீரோ படத்துல இருந்தாலும் ஒரே ஹீரோயின் சுனைனா மட்டுமே. சுனைனா, கிருஷ்ணாவுக்குதான் ஜோடியாக நடிக்கிறார்.
நாஞ்சில் நாடு என்று சொல்லப்படுகின்ற குமரி மாவட்டத்தைச் சுற்றி உள்ள பகுதிகளை களமாகக் கொண்ட கதை. அந்த மண்ணின் மைந்தர்களின் பகைமை உணர்வுகள், நட்பு, காதல், மோதல் போன்றவைகளை உள்ளடக்கிய ஒரு ஆக்ரோஷமான படம்,” என்கிறார் இயக்குனர் ஜெய் கிருஷ்ணா.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 26ம் தேதி நாகர்கோவிலில் ஆரம்பமாகி தொடர்ந்து கன்னியாகுமரி, முட்டம், கேரளா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.