‘கத்தி’ படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களைச் சந்தித்துப் பேசி வந்தார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் நிறுவனம் பற்றிய விளக்கங்களை அளித்தார்.
நேற்று ‘கத்தி’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்ற போது, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைப் பற்றிப் பேசிவிட்டு அவருடைய எண்ணத்தையும் உருக்கமாக வெளிப்படுத்தினார்.
“நான் முதல் படம் அசிஸ்டென்ட் டைரக்டரா ஒர்க் பண்ணும் போது எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். இயக்குனரா என்னோட முதல் படத்துக்கு நான் பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கினேன். என்னோட இரண்டாவது படத்துக்கு மாசம் 25000 ரூபா சம்பளம் வாங்கினேன்.
நான் இன்னைக்குப் பண்ற தெலுங்குப் படத்துக்கும், ஹிந்திப் படத்துக்கும் கூட சம்பளம் கம்மிதான். நான் என்னைக்குமே பணத்துக்குப் பின்னாடிப் போனதே கிடையாது.
தமிழ்நாட்டுல அதுவும் சென்னையில இருந்து 200 கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஒரு கிராமத்துல இருந்து போன எனக்கு ஹிந்தி கல்ச்சர் தெரியாம, ஹிந்தியில வந்து படம் எடுக்க முடியுமான்னு நினைச்சவங்களுக்காகத்தான் நான் ஹிந்தியில படம் எடுக்கப் போனேன்.
எதுக்கு நான் இத நான் சொல்றண்ணா முன்னணி ஹாலிவுட் கம்பெனியான ‘20த் செஞ்சுரி பாக்ஸ்’ கம்பெனியோட டைரக்ட் லின்க் எனக்கு இருக்கு. ‘ஹாலிடே’ படத்தை புரொடியூஸ் பண்ணதும் அம்பானியோட ரிலையன்ஸ் குரூப்தான். இன்னைக்கு ‘கத்தி’ படத்தை லைக்கா புரொடியூஸ் பண்ணிருக்காங்க.
என்னைக்கும் பணத்துக்குப் பின்னாடி போறவங்க நானும் கிடையாது, விஜய் சாரும் கிடையாது.
எனக்குத் தமிழைத் தவிர வேற மொழி தெரியாது. என் உடம்புல ஓடற ஒவ்வொரு செல்லுலயும் தமிழ்தான் இருக்கு. ஒவ்வொரு அணுவும் தமிழ்தான், அதை ப்ரூவ் பண்ணணும்கறதுக்காகத்தான் பணத்துக்காகப் பின்னாடி நான் போனது இல்லங்கறதுக்காகத்தான் என் சம்பளத்தை வெளியில சொன்னன். இதுவரைக்கும் நான் அதப் பத்தி சொன்னது கிடையாது.
எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கு. எங்க உயிர், உடமை எல்லாம் இந்த தமிழ்நாடும், தமிழ் மக்களும் போட்ட பிச்சை. இதுக்கு எதிரா எந்த நிமிஷமும் நினைச்சிப் பார்க்க மாட்டோம். இதை பேச வேணாம்னுதான் சொன்னாங்க, ஆனா, பேசணும்னு தோணுச்சி சொன்னன். இந்தப் படம் கண்டிப்பா தீபாவளிக்கு வரும்,” என்று உருக்கமாகப் பேசினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஹிந்தித் திரையுலகில் பொதுவாக தென்னிந்தியாவிலிருந்து செல்லும் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் மிகப் பெரிய சவால்களும், சங்கடங்களுக்கும் காத்திருக்கும். ஆனால், அதையெல்லாம் முறியடித்து இன்று இந்திய அளவில் உயர்ந்து நிற்கும் இயக்குனர்களில் ஒருவராக ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.