‘வசந்தகுமாரன்’ பிரச்சனை…வசந்தம் வீசுமா…?

vasanthakumaran tamil movie issue newsவிஜய் சேதுபதி, பிந்து மாதவி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்க ஆனந்த் குமரேசன் இயக்க ‘வசந்தகுமாரன்’ என்ற படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்க முடிவெடுத்து ஆரம்பமாக வேண்டிய திரைப்படம் இன்னும் ஆரம்பமாகாமலே இருக்கிறது. படம் ஆரம்பமாகவில்லையே தவிர படத்தைப் பற்றிய பிரச்சனை தற்போது ஒரு புது சர்ச்சையாக தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இந்தப் படத்தைப் பற்றிய விவகாரம் புகைச்சலைக் கிளப்பிக் கொண்டிருக்க, நேற்று படத்தின் பிரச்சனைக்குரிய இருவர் நேற்று அறிக்கை வெளியிட்டும், பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் அவரவர் நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜய்சேதுபதி இரண்டு வருடங்களுக்கு முன் வெற்றிகரமான ஏணிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது, அவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை வாங்கி வெளியிட்ட ஸ்டுடியோ 9 நிறுவனம் விஜய் சேதுபதியை அவர்கள் தயாரிக்கும் ‘வசந்தகுமாரன்’ படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தது.

அதன் பின் சில பல காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் விஜய் சேதுபதி நடிக்க ஆரம்பித்து விட்டாராம். தற்போது தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு எங்களது ‘வசந்தகுமாரன்’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்று கறாராகப் பேசுகிறார் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷ்.

ஆனால், அந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது, வேண்டுமானால் அவர்களிடமிருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தந்துவிடுகிறேன் என விஜய் சேதுபதி சொன்னாராம்.

மேற்படி விவகாரம், நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விசாரணையில் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் ஒரு  இதழில் தன்னைப் பற்றி தவறாக  செய்தி வந்துள்ளதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறிய சுரேஷ் நேற்று பத்திரிகையாளர்களைச்   சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று விஜய் சேதுபதி இருக்கும் உயர்ந்த நிலைக்கு, நாங்களும் ஒரு காரணம்தான். அவருடைய படங்கள் நன்றாக வெற்றி பெறும் என்று ஆரம்ப கட்டத்திலேயே கணித்து, அந்தப் படங்களை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்று அவருக்காக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களைப் போல அவருடைய படங்களை விளம்பரப்படுத்தினோம்.

அவருக்கு முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் கொடுத்ததும் நாங்கள்தான். ஆனால், அவரோ எங்களது படத்தில் நடிக்காமல் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கத்தான் மற்ற படங்களில் நடிக்க நானும் சம்மதித்தேன். இனியும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்து , அவர் எங்களது படத்தில் நடித்தேயாக வேண்டும்.

‘வசந்தகுமாரன்’ படத்திற்காக பல மாதங்களாக அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, 9 உதவி இயக்குனர்களை வைத்து டிஸ்கஷன் செய்து சுமார் 90 லட்ச ரூபாய் அளவிற்கு இதுவரை செலவு செய்துள்ளோம். அவர் தரும் எந்த பணமும் எங்களுக்குத் தேவையில்லை. அவர் படத்தில் நடித்துக் கொடுத்தே ஆக வேண்டும், ” என்று கூறினார்.

நேற்று மதியம், இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்னாலேயே விஜய் சேதுபதி சார்பில் மீடியாக்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது.

அதில், “ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறு வனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரை படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறு தலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும் நான் வாங்கிய ரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவதாகவும் அன்றே கூறி விட்டேன்.

ஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன்.அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்த போது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப் படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன். இந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்ப தாக வசந்தகுமாரன் திரைப் படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத் தில் ’புறம்போக்கு திரைப் படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக் கிறேன். இந்நிலையில் வசந்தகுமாரன் திரைப்படம் ஆரம் பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

இது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என் பதை தெரிவித்துக் கொள் கிறேன். இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப் பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்,” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

‘வசந்தகுமாரன்’ திரைப்பட விவகாரம் நேற்று இரு தரப்பின் மூலமும் மிகப் பெரும் விஸ்வரூபத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சங்கங்களின் முடிவைப் பொறுத்தே இத் திரைப்படத்தின் எதிர்காலம் என்ன என்பது தீர்மானமாகும்.

விரைவில் விவகாரம் முற்றுப் பெற்று இருவரும் இணைந்து ‘வசந்தகுமாரன்’ படத்தை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், சினிமாவிலும், அரசியலிலும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை.

 

 

 

Read Previous

இன்றைய ரிலீஸ் – 7 படங்கள்…

Read Next

‘கத்தி’ விவகாரம்…கோபி மீது முருகதாஸ் அவதூறு வழக்கு…