‘ஐ’ – தெலுங்கு இசை வெளியீடு – சில துளிகள்…

i telugu audio  launch

ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள தி பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான என்.வி.பிரசாத், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, த்ரிவிக்ரம் சீனிவாஸ், பொயப்பட்டி சீனு, ‘ஐ’ படத்தின் இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், விக்ரம் மற்றும் பல தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

‘ஐ’ படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கு முதலில் ‘மனோகரடு’ என்று பெயர் வைத்திருந்தனர். தற்போது  ‘ஐ’ என்ற பெயரிலேயே தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

படத்திற்குப் பாடல்களை எழுதிய ஆனந்த் ஸ்ரீராம், ராமஜோகைய சாஸ்திரி, சந்திரபோஸ், சுதாலா அசோக் தேஜா ஆகியோர் இயக்குனர் ஷங்கரின் இசையார்வத்தைப் பாராட்டியும், படத்திற்கு பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுத்ததைப் பற்றியும் பேசினர்.

இயக்குனர் பொயப்பட்டி சீனு பேசும் போது, “நான் இயக்குனர் ஷங்கர் அவர்களின் அனைத்துப் படங்களையும் ரசித்துப் பார்த்து வருகிறேன். அவருடைய படங்களில் இருக்கும் சமூகக் கருத்து என்னைக் கவர்ந்த ஒன்று. அவர் எனக்கு மட்டுமல்ல, பல வளரும் இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்,”என்றார்.

இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் பேசும் போது, “ஐ’ படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள், வரும் பொங்கலுக்கு ‘ஐ’ படத்தை திரையரங்கில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்,” என்றார்.

இயக்குனர் ராஜமௌலி பேசும் போது, “நான் உதவி இயக்குனராக இருந்த சமயம் ‘காதலன்’ திரைப்படத்தில் முக்காபுலா பாடலில், அவர் எப்படி பிரபுதேவாவை மறைய வைத்துப் படமாக்கினார் என்பது பல ஆண்டுகள் எனக்குப் புரியாமலே இருந்தது. இப்போது, நான் புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும், ‘ஐ’ படத்தின் டிரைலரைப் பார்த்ததும், ஷங்கர் எப்படி ஒவ்வொரு  ஃபிரேமையும் படமாக்கியிருப்பார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் பேசும் போது, “அந்நியன்’ படம் வெளிவந்த பிறகு நான் ஷங்கருக்கு படம் ஒன்றை இயக்க அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அப்போது ஏவிஎம் நிறுவனத்தினர் என்னைத் தேடி திருப்பதிக்கு வந்தனர். அவர்களுக்கு ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைத்திருப்பதாகவும், ஷங்கர் அந்தப் படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். ஷங்கர் அந்தப் படத்தை இயக்க ஆவலாக இருப்பதாகவும் நான் சம்மதித்தால் மட்டுமே அவரை ஒப்பந்தம் செய்வோம் என்றும் சொன்னார்கள்.

ஷங்கரின் தொழில் நேர்மை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ‘ஐ’ படத்தின் தெலுங்கு உரிமை எனக்குக் கிடைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன்,” என்றார்.

விக்ரம் பேசும் போது,“என் மீது அன்பு செலுத்தும் தெலுங்கு ரசிகர்களுக்கு எனது நன்றி. உங்கள் மனதில் இடம் பிடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ‘ஐ’ படம் நிச்சயம் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும்,” என்றார்.

அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய ஷங்கர், “ஐ’ படத்தின் டிரைலரில் பல ஷாட்களைக் காட்டியிருப்பதால் அது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் ஒரு கூட்டு முயற்சி. இந்தப் படத்துல மொத்தமா மெசேஜ் சொல்லலை, அங்கங்க மெசேஜ் சொல்லியிருக்கோம். இதுவரைக்கும் இப்படி ஒரு படம் வந்ததில்லைன்னு சொல்ற அளவுக்கு புதுசா இருக்கும். இந்தப் படம் ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம்.

‘மகதீரா’ படத்திலிருந்து நான் ராஜமௌலியின் ரசிகன், அது ‘நான் ஈ’ படம் பார்த்ததும் இரு மடங்காகி விட்டது. இப்போது உங்களைப் போலவே நானும் ‘பாகுபலி’ படத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

நான் தெலுங்குல எந்தப் படமும் பண்ணலை, என்னுடைய படங்கள் எல்லாமே டப்பிங் ஆகிதான் இங்க ரிலீஸ் ஆகியிருக்கு. இருந்தாலும் என்னோட படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருக்கீங்க. இரண்டு முறை தெலுங்குப் படம் இயக்க வந்து நடக்க முடியாமப் போயிடுச்சி. சீக்கிரமே ஒரு நேரடித் தெலுங்குப் படம் பண்ணுவேன்.

இந்தப் படத்துக்கு தெலுங்குல வசனம் எழுதின ராமகிருஷ்ணன், சார் எந்த விஷயமும் டப்பிங்ல மிஸ் ஆகிடக் கூடாதுன்னு சொன்னாரு. அவர் ரொம்ப அற்புதமான வசனம் எழுதியிருக்காரு. பாடல்கள் எழுதின எல்லாருக்கும் என்னுடைய நன்றி. அந்த அளவிற்கு பொறுமையா எனக்குப் பாடல்களை எழுதிக் கொடுத்திருக்காங்க.

இந்தப் படத்துல நடிக்கிறது ரொம்ப கஷ்டம். விக்ரம், ஒரு படத்துக்காக என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதைப் பண்ணாரு. படத்துல அவர் வெயிட் குறைச்சதுக்கு நான் காரணமில்லை. படத்துல கொஞ்சம் வெயிட் குறைக்கணும்னு சொன்னேன், உங்க உடம்புக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு சொன்னேன். அவங்க மனைவி கிட்ட கூட சொன்னேன், அவருடைய உடம்பைப் பார்த்துக்கங்கன்னு சொன்னேன், நான் அதுக்கு காரணமில்லைன்னு, விக்ரமோட ஐடியாதான் அதுன்னு சொல்லிட்டேன். ஆனால், அவங்க அவர் அதை ஜாலியாதான் சார் பண்ணிட்டிருக்காருன்னு சொன்னாங்க.

என்னோட இரண்டாவது படத்துல இருந்து பி.சி.ஸ்ரீராம் கூட ஒர்க் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். அது முடியலை, அவர் அசிஸ்டென்ட்ஸ் பல பேர் என் படத்துல கேமராமேனா வேலை பார்த்ததால அவர் என் கிட்ட டேட் இல்லன்னு சொல்லிட்டிருந்தாரு. படத்தோட டைட்டில்ல அவர் பேரு வரும் போதே கைதட்டின ரசிகர்கள்ல நானும் ஒருவன். இப்ப அவர் கூட வேலை பார்த்தது என்னோட அதிர்ஷ்ம், எனக்கு ரொம்பப் பெருமை.

இந்தப் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் வழக்கம் போல பிரமாதமான பாடல்களைக் கொடுத்திருக்காரு. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், எடிட்டிர் ஆண்டனி ஆகியோருக்கும் நன்றி.

என்னோட தயாரிப்பாளர் என் கிட்ட படம் ஆரம்பிக்கும் போது, “நான் எவ்வளவோ படங்களைத் தயாரிச்சிட்டேன். எனக்கு சாதாரணமா எதுவும் வேணாம். எதையாவது ஸ்பெஷலா பண்ணுங்கன்னு சொன்னாரு. அதுவே எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சது. அதனாலதான் இப்படி ஒரு வித்தியசாமான கதைக் களத்துல படத்தைக் கொடுக்க முடிஞ்சுது. அனைவருக்கும் என் நன்றி,” என இயக்குனர் ஷங்கர் பேசினார்.

 

Read Previous

அப்பா பாராட்டு…தேசிய விருது – ‘கோலி சோடா’ விஜய் மில்டன்

Read Next

Yennai Arindhaal – Official Trailer