‘புலி’ தலைப்பு பற்றி ஸ்ரீதேவி…

vijay and chimbudevanவிஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‘புலி’ என பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

படத்தின் பெயரைப் பற்றிய அறிவிப்பு வந்ததும் அதைப் பற்றி அந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களான ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி, படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால் ஸ்ரீதேவியைத் தவிர வேறு யாருமே படத்தின் தலைப்பைப் பற்றி எதையுமே சொல்லவில்லை.

நடிகை ஸ்ரீதேவி அவருடைய டிவிட்டரில், “என்னுடைய புதிய தமிழ்ப் படமான ‘புலி’ படத்தின் பெயரை அறிவிப்பதில் நான் மகத்தான மகிழ்ச்சியடைகிறேன். அந்தக் குழுவினருடனும், கலைஞர்களுடனும் பணிபுரிவது ஒரு மகத்தான அனுபவம்,” எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சுப்ரமணியம், “புலி…இந்தப் படத்தில் நானும் பங்கெடுத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

இவர்களிருவரைத் தவிர படத்தில் உள்ள மற்ற கலைஞர்களாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் டிவிட்டர் தளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள். ஆனால், ஒருவரும் தலைப்பைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

ஹன்சிகா அவருடைய டிவிட்டர் தளத்தில் ‘ஆம்பள’ படத்திற்குத்தான் பிரமோஷன் செய்து வருகிறார். ஸ்ருதிஹாசன், பவன் கல்யாண் டிவிட்டருக்குள் நுழைந்ததற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  சுதீப், புத்தாண்டுக்குப் பிறகு டிவிட்டர் பக்கமே வரக் காணோம்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்த ஆண்டின் முதல் ஞாயிற்றுக் கிழமை எப்படியிருந்தது என்று கேட்டிருக்கிறார்.

இவர்களுக்கெல்லாம் அவர்கள் பங்கு பெற்றுள்ள ‘புலி’ படத்தின் தலைப்புப் பற்றிய செய்தி சென்று சேரவில்லையே என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

‘புலி’ படத்திற்கு தலைப்பு வைத்தது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு பத்திரிகைச் செய்தியும் படக்குழு சார்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read Previous

விஜய்யின் ‘புலி’ – பதுங்குமா…பாயுமா…?

Read Next

விஜய் டிவியில் பொங்கலுக்கு ‘ஜிகர்தண்டா’…