வெப்பம் குளிர் மழை - விமர்சனம்
31 Mar 2024
பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில், சங்கர் ரங்கராஜன் இசையில், திரவ், இஸ்மத் பானு, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
திருமணமாகி சில வருடங்கள் ஆன பின்னும் குழந்தையில்லாமல் தவிப்பர்கள் இருக்கிறார்கள். மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தால் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் அதற்குரிய சிகிச்சையில் ஈடுபடுகிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் இருக்கும் சிலருக்கு அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. அப்படியான கணவன், மனைவி பற்றிய ஒரு வாழ்வியலை இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கல்.
சிவகங்கை மாவட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் தம்பதியினர் திரவ், இஸ்மத் பானு. திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஊர் மக்களும், மாமியாரும் ஏளனம் செய்ய நகரம் சென்று சிகிச்சை எடுக்க முடிவு செய்கிறார் இஸ்மத். விருப்பமில்லாமல் வரும் கணவர் திரவ்வையும் சமாளித்து சோதனை செய்து கொள்கிறார்கள். அதில் திரவ்வுக்குத்தான் மருத்துவ ரீதியில் பிரச்சனை என சோதனை முடிவுகள் வருகிறது. இருப்பினும் கணவன் கலங்கக் கூடாது என நினைத்து செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார் இஸ்மத். சில வருடங்களுக்குப் பிறகே அந்த உண்மை திரவ்வுக்குத் தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
பெத்த பெருமாள் என்ற கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் அறிமுக நாயகன் திரவ். பல படங்கள் நடித்தது போன்ற அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், பாசம், கோபம் என அறிமுக நடிகர் என்று சொல்லவே முடியாத அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு அமைந்துள்ளது.
பாண்டி என்ற கதாபாத்திரத்தில் இஸ்மத் பானு. திரவ்வுக்குப் பொருத்தமான ஜோடி. கிராமத்துப் பெண்கள் என்றாலே அவர்களுக்குள் ஒரு தைரியம் இருக்கும். எதையும் சமாளிக்கும் குணம் கொண்டவர்கள். மாமியார், கணவர், ஊரார் என அனைவரையும் திறமையாக சமாளிக்கும் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் இஸ்மத்.
கிராமத்து மாமியாரை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் ரமா. ஒரு கட்டத்தில் மருமகளின் நிலை அறிந்து அவருக்காகப் பரிந்து பேசும் காட்சியில் அப்படி கோபப்பட்டவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். எம்எஸ் பாஸ்கர் போல ஊர் விஷயங்களை அசை போடும் ஒருவர் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பார். வழக்கம் போல தன் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருக்கிறார் பாஸ்கர்.
சங்கர் ரங்கராஜன் பின்னணி இசை, பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு கதையுடன் சேர்ந்து பயணித்து இயக்குனருக்கு கை கொடுத்திருக்கிறது.
சில சமயங்களில் திரைக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்ற ஒரு குழப்பம் வந்துவிடுகிறது. மருத்துவம் சார்ந்த சில விஷயங்களை கொஞ்சம் விரிவாகத் தந்திருந்தால் தெரியாதவர்களுக்கும் போய் சேர்ந்திருக்கும். குழந்தையில்லாத பிரச்சனைக்குப் பெண்கள் மட்டுமே காரணமில்லை என்பதை வலியுறுத்தி சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
Tags: veppam kulir mazhai