கள்வன் - விமர்சனம்

05 Apr 2024

பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், ரெவா இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், இவானா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சத்தியமங்கலம் மலைப் பகுதியில் உள்ள இருட்டிபாளையம் என்ற கிராமத்தில் நடக்கும் கதை. சின்னச் சின்னத் திருட்டுக்களைச் செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள் ஜிவி பிரகாஷ், தீனா. திருட்டை விட்டு வனத்துறை காவலர் வேலையில் சேர ஆர்வமாக இருப்பவர். திருடச் சென்ற இடத்தில் இவானாவைப் பார்த்ததும் காதல். வேண்டாமென்ற அவர் மனதை மாற்ற முதியோர் இல்லத்தில் இருந்த பாரதிராஜாவை தாத்தாவாக தத்தெடுக்கிறார். தத்தெடுப்பது வளர்ப்பதற்காக அல்ல அவரைக் கொல்வதற்காக. எதற்காக இப்படி செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

‘ரெபல்’ படத்தில் பார்த்த அதே தோற்றத்தில் ஜிவி பிரகாஷ். பழைய லுங்கி, சட்டை, கலைந்த முடி, தாடி என திருடன் கதாபாத்திரத் தோற்றத்தில் ஓகே. நடிப்பதற்கும் கொஞ்சம் முயற்சித்திருக்கிறார். அவரது நண்பராக தீனா, எப்போதும் கூடவே இருக்கிறார். காமெடிக்காக அவரை நடிக்க வைத்துள்ளார்கள். ஆனால், எப்போது சிரிக்க வைத்தார் என யோசிக்க வைக்கிறார். அப்பாவியான பெண்ணாக இவானா. நர்சிங் படித்தாலும் திருடனான ஜிவியைக் காதலிக்கிறார். அபத்தமான காதலைச் சொல்லும் தமிழ் சினிமாவில் இந்தப் படமும் ஒன்று.


இடைவேளை சமயத்தில்தான் பாரதிராஜா கதாபாத்திரம் வருகிறது. அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக புலியை அடக்கும் ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். யாரென்றே தெரியாத பாரதிராஜாவை ஜிவி பிரகாஷ் தத்தெடுக்கிறார் என்பது சொல்வதற்கு நன்றாக இருக்கிறது. காட்சிகளில் அந்த உணர்வை அழுத்தமாகப் பதிய வைத்திருக்கலாம்.

தன் படங்களுக்கு இசையமைக்கும் போதவாது இரண்டு, மூன்று சூப்பர் ஹிட் பாடல்களை ஜிவி கொடுக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு படத்திலும் அதை மிஸ் செய்கிறார் என்றே தோன்றுகிறது.

யானை, புலி ஆகியவை சுமாரான கிராபிக்ஸ் காட்சிகளால் வந்து போகிறது. ஒரு படத்திற்கான சிறப்பம்சமே திரைக்கதைதான் என்பதை அறிமுக இயக்குனர்கள் இன்னம் தெரிந்து கொள்ள வேண்டும். கதையாக யோசித்த அளவிற்கு திரைக்கதையாகவும், அழுத்தமான காட்சிகளாகவும் யோசித்திருந்தால் நம் மனதைத் திருடிய ‘கள்வன்’ ஆக இருந்திருப்பார்..

Tags: kalvan, gv prakashkumar, ivana, bharathiraja

Share via: