ஆலகாலம் - விமர்சனம்

05 Apr 2024

ஜெயகிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், ஜெயகிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

கணவன் குடிப்பழக்கத்தால் இறந்து போக, மகனை நன்றாகப் படிக்க வைத்து நல்ல வேலையில் சேர்க்க வைக்க வேண்டும் என கிராமத்துத் தாய் ஈஸ்வரி ராவ் நினைக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்த மகன் ஜெயகிருஷ்ணமூர்த்தியை சென்னையில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்க்கிறார். திறமையான மாணவர் எனப் பெயரெடுக்கும் ஜெயகிருஷ்ணாவை உடன் படிக்கும் மாணவி சாந்தினி காதலிக்கிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த சாந்தினி, பெற்றோர் எதிர்ப்பை மீறி ஜெயகிருஷ்ணாவைத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான சில மாதங்களிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார் ஜெயகிருஷ்ணா. அடுத்தடுத்து சில பல கொடுமையான விஷயங்கள் நடக்கிறது. சாந்தினி அதையெல்லாம் சமாளித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் அப்படியே பொருத்தமாக இருக்கிறார் ஜெயகிருஷ்ணா. கல்லூரி மாணவராக நடிக்க வரவில்லை என்றாலும் குடிகாரராக மாறிய பின் அந்த நடிப்பெல்லாம் எங்கிருந்து வந்தது என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். குடிக்கு அடிமையான ஒரு முழு குடிகாரன் எப்படி இருப்பானோ அதை அப்படியே நடித்துக் காட்டியுள்ளார்.


ஏழையாக இருந்தாலும், குடிகாரனாக மாறிப் போனாலும் காதலுக்காக கணவனை கைவிடாத கணவனே கண் கண்ட தெய்வமென நினைக்கும் அந்தக் காலப் பெண்ணாக சாந்தினி. குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு வேலைக்கும் சென்று கணவனுக்கு கஞ்சி ஊற்றாமல் குவார்ட்டர் வாங்கிக் கொடுத்து ஊற்றுகிறார். இப்படியான மனைவி அமைந்தால் எந்த குடிகாரன் திருந்துவான்.

அப்பாவி அம்மாவாக ஈஸ்வரி ராவ். குடியால் தன் கணவன்தான் இறந்து போனான் என்றால் மகனும் அதற்கு அடிமையாகிவிட்டானே என்று அழுதுபுரண்டு அவர் செய்த விஷயம் அதிர்ச்சிதான் என்றாலும் ஒரு தாயின் கோபம் நியாயமானதே.

காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுத்து தக்க சமயத்தில் உதவி செய்து காப்பாற்றும் நல்ல குணம் கொண்டவராக தீபா சங்கர்.

படத்தில் உள்ள சிறு சிறு குறைகளை விட்டுத் தள்ளுங்கள். குடிக்கு எதிராக இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். தைரியத்தோடு குடியினால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதை கண்முன்னே கொடுத்து கலங்க வைத்துள்ளார்கள்.

சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு படம் என்ற விருதை இந்தப் படத்திற்குக் கொடுங்கள்.

Tags: aalakaalam,

Share via: