நேற்று இந்த நேரம் - விமர்சனம்
30 Mar 2024
கேஆர் நவீன்குமார் இயக்கத்தில், கெவின் இசையமைப்பில், ஷாரிக்ஹாசன், ஹரிதா, மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்.
ஊட்டியில் ஒரு ரிசார்ட், அங்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் குழுவில் காணாமல் போன இருவர், அதன்பின் நடந்தது என்ன என்பதுதான் படத்தின் கதை. ஒரு க்ரைம் நடந்தால் அதன் தொடர்ச்சியாக களத்திற்குச் சென்று விசாரணை நடத்துவதுதான் வழக்கமானது. ஆனால், இந்தப் படத்தில் நேருக்கு நேரான விசாரணை மூலம் மட்டுமே முழு படமும் நகர்கிறது.
ஷாரிக், ஹரிதா இருவரது மூன்றாவது வருட காதலைக் கொண்டாட தங்களது நண்பர்களுடன் ஊட்டிக்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். சில நாட்களில் ஷாரிக் காணாமல் போகிறார். அவரை மற்றொரு நண்பர் கொலை செய்திருப்பாரோ என்ற சந்தேகம் வர, அந்த நண்பரும் அடுத்த நாள் காணாமல் போகிறார். இந்த வழக்கை காவல் துறை விசாரிக்கிறது. காணாமல் போனவர்களை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஷாரிக் மட்டுமே நமக்கு ஓரளவிற்குத் தெரிந்த நடிகராக இருக்கிறார். மற்றவர்கள் ஏற்கெனவே படங்களில் நடித்தவர்களா, புதுமுகங்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும் நண்பர்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
நெருங்கிய நண்பர்கள் எனக் காட்டுகிறார்கள். ஆனால், அவர்களுக்குள் இப்படி ஒரு மோதல், பகை இருக்கிறது என்பது போகப் போகத் தெரிய வருவது அதிர்ச்சியாக உள்ளது. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் முன்பு வரை விசாரணை காட்சிகளிலேயே படம் நகர்ந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் நாம் யூகிக்க முடியாத அளவுக்கு உள்ளது.
ஒரே ரிசார்ட்டில் நடக்கும் கதை என்பதால் கேமரா கோணங்களில் முடிந்தவரையில் மாற்றங்களைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷால். கெவின் இசையும் பரபரப்பைத் தருகிறது. எடிட்டர் கோவிந்தை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.
அதிக அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து பரபரப்பான த்ரில்லரைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். படத்தின் நீளத்தைச் சுருக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Tags: netru indha neram