இடி மின்னல் காதல் - விமர்சனம்

30 Mar 2024

பாலாஜி மாதவன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், சிபி, பவ்யா ட்ரிகா, யாஷ்மின் பொன்னப்பா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

காதலர்களான சிபி, பவ்யா ட்ரிகா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவர் மீது காரை இடிக்க, அவர் இறந்து விடுகிறார். இறந்து போனவரின் மகன் ஜெய் ஆதித்யா தன் அப்பா இன்னும் வீட்டுக்கு வராமல் இருப்பதால் தவிக்கிறார். அம்மாவை இழந்து அப்பா மட்டுமே அவனுக்கு ஆதரவு. அந்த சமயத்தில் அவனுக்கு ஆறுதல் சொல்லி கூடவே இருக்கிறார் பாலியல் தொழில் செய்யும் யாஷ்மின் பொன்னப்பா. ஒரு கட்டத்தில் அவனது அப்பா இறந்த தகவல் சொல்லப்படுகிறது. அதனால், மன ரீதியாக பாதிக்கப்படுகிறான். ஆதித்யாவின் அப்பா தன் தம்பியைக் கொன்றவன் என ரவுடி வின்சென்ட் அவனைக் கடத்த முயற்சிக்கிறார். இதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு பக்கம் விபத்து, மறு பக்கம் விபத்தில் இறந்தவர் குடும்பத்தை பழி வாங்கத் துடிக்கும் ரவுடி, இன்னொரு பக்கம் விபத்தில் இறந்தவரது மகனின் நிலைமை என சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் பின்னப்பட்ட ஒரு கதை. அருமையான கதையைத் தேர்வு செய்த இயக்குனர் அதை இன்னும் சிறப்பான திரைக்கதையால் சொல்லியிருந்தால் படம் அதிகமாக பேசப்பட்டிருக்கும். சில தேவையற்ற காட்சிகள் இப்படத்தின் வேகத்திற்குத் தடையாக அமைந்துவிட்டது.

சிபி, பவ்யா ட்ரிகா இருவரும் விபத்தை ஏற்படுத்திவிட்டு அதிலிருந்து எப்படி தப்பிப்பது என யோசிக்கிறார்கள். சிபி போலீசிடம் சரணடைய நினைத்தாலும் அடுத்த சில தினங்களில் அமெரிக்கா செல்ல வேண்டிய சூழலில் அமைதி காக்கிறார். விதி அவரிடமே ஜெய் ஆதித்யாவைக் கொண்டு வந்து சேர்க்கிறது. தான் ஏற்படுத்திய விபத்திற்கு பிராயச்சித்தம் தேட நினைக்கிறார்.

பாலியல் தொழிலாளிகளிலும் நல்ல மனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை யாஷ்மின் பொன்னப்பா கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். எந்த சூழ்நிலையிலும் ஜெய் ஆதித்யாவை கைவிடக் கூடாது என நினைப்பவராக யாஷ்மின். இந்த சூழலில் அவர்களுக்கு உதவி செய்யும் போலீஸ்காரராக பாலாஜி சக்திவேல்.

தன் தம்பியைக் கொன்ற ஜெய் ஆதித்யாவின் அப்பாவைத் தேடிப் பிடித்து பழி வாங்க சென்னைக்கு வருகிறார் வின்சென்ட். வில்லத்தனத்தில் ஓவராகவே நடித்திருக்கிறார்.

ஜெயசந்தர்பின்னம்மேனி ஒளிப்பதிவு, சாம் சிஎஸ் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் உள்ளது.

சென்னையில் வெட்ட வெளிச்சமாய் பாலியல் தொழில் செய்யும் ஒரு இடம் இருக்கிறது என்று சினிமாத்தனமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒரே படத்தில் சில பல விஷயங்களை சேர்த்து சொல்ல முயற்சித்ததுதான் தவறாகப் போய்விட்டது.

Tags: idi minnal kadhal

Share via: