ஹாட் ஸ்பாட் - விமர்சனம்
27 Mar 2024
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சதீஷ் ரகுநாதன், வான் இசையமைப்பில், கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிரா, ஜனனி, சுபாஷ், கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
நான்கு தனித் தனி குட்டிக் கதைகளை வைத்து ஒரே படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சமூகத்தில் வழக்கமாக இருக்கும் சில குறிப்பிட்ட விஷயங்களை மாற்றி வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார். சில கேள்விகள் எழுந்தாலும் ரசிக்கும்படியான கதைகளாகவே நான்கு கதைகளும் இருக்கிறது.
ஹாப்பி மேரிட் லைப்
ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் இருவரும் காதலர்கள். தங்களது பெற்றோர்களை சந்திக்க வைத்து திருமணம் பேச முடிவு செய்கிறார்கள். திருமணமான பெண்கள்தானே கணவரது வீட்டிற்குப் போவார்கள். இங்கு திருமணமான ஆதித்யா மனைவி வீட்டிற்குச் சென்று ஒரு மருமகள் செய்யும் வேலைகளை மருமகனாகச் செய்கிறார். ஆதித்யாதான் தாலி கட்டிக் கொள்கிறார். ஆனால், இது அனைத்துமே கனவு என முடிகிறது. அதன்பின் நடக்கும் பெரியவர்களது சந்திப்பில் ஆதித்யா முக்கிய முடிவு எடுக்கிறார் அது என்ன என்பதுதான் இக் கதையின் கிளைமாக்ஸ்.
ஆதித்யா, கௌரி கிஷன் இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். கனவுக் காட்சியில் அனைத்துமே நேர்மாறாக நடக்கிறது. மாமனார், மருமகன் சண்டை, மாமனார் கொடுமைக்கு ஆளாகும் மருமகன் என கொஞ்சம் விபரீத கற்பனையுடன் காட்சிகள் அமைந்துள்ளது. இருந்தாலும் ஆதித்யாவின் அம்மாவும், கௌரியின் அம்மாவும் திருமணத்திற்குப் பிறகு அவர்களது பிறந்த வீட்டை எவ்வளவு இழந்துவிட்டார்கள் என்பதைக் கேட்கும் போது நெகிழ்வாக உள்ளது. அதுதான் இக்கதையின் உயிர்நாடி.
கோல்டன் ரூல்ஸ்
சாண்டி, அம்மு அபிராமி இருவரும் காதலர்கள். அம்முவை தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்க அழைத்து வருகிறார் சாண்டி. அப்போதுதான் அம்மு, வீட்டை விட்டு ஓடிப் போன தனது தங்கையின் மகள் என்ற உண்மை சாண்டியின் அம்மாவுக்குத் தெரிய வருகிறது. அண்ணன், தங்கையான சாண்டி, அம்மு காதலித்ததே தவறு என கொதிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
நான்கு கதைகளில் சீக்கிரமே முடிந்து போகும் கதையாக இருக்கிறது. அழுத்தமான கிளைமாக்சும் இக்கதைக்கு இல்லை.
தக்காளி சட்னி
சுபாஷ், ஜனனி இருவரும் காதலர்கள். அலுவலகத்தில் தவறான நடத்தை காரணமாக வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யப்படுகிறார் சுபாஷ். காதலன் சுபாஷை சீக்கிரமே நல்ல வேலையில் சேரும்படி அழுத்தம் கொடுக்கிறார் ஜனனி. சரியான வேலை கிடைக்காத காரணத்தால் வேறு ஒரு முடிவு எடுக்கிறார் சுபாஷ். ஆண் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அது ஜனனிக்குத் தெரிய வர, அடுத்து என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
தமிழ் சினிமா அதிகம் தொடாத ஒரு கதைக்களம், கதாபாத்திரங்கள். இக்கதையில் நிறையவே அதிர்ச்சிகள் உண்டு. சுபாஷ், ஜனனி, டாடி சரவணன் ஆகியோரது கதாபாத்திரங்களும், அதில் அவர்களது நடிப்பும் இந்த சொல்லப்படாத கதைக்கு பலமாக அமைந்துள்ளது.
ஃபேம் கேம்
கலையசரன், சோபியா கணவன் மனைவி.அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள். இருவரையும் டிவி ஷோ ஒன்றில் கலந்து கொள்ள வைத்து பிரபலமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த ஷோவில் மகள் அவரது திறமையால் பிரபலமாகிறார். ஆனால், திடீரென இறந்து போகிறார். மகளின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட கலையசரன், அந்த டிவி ஷோவின் பைனலில் அந்த உண்மையை போட்டு உடைக்கிறார். அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
இந்தக் காலத்தில் குழந்தைகள் கலந்து கொள்ளும் பல டிவி ஷோக்கள், பல டிவிக்களில் நடக்கிறது. வரம்பு மீறி நடக்கும் சில டிவி ஷோக்களை கடுமையாகத் தாக்கியிருக்கிறார் இயக்குனர். கலையரசன், சோபியா இருவரும் ஏழை கணவன், மனைவியாக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
சதீஷ் ரகுநாதன், வான் ஆகியோரது இசையமைப்பு, கோகுல் பினாய் ஒளிப்பதிவு, முத்தையன் படத்தொகுப்பு படத்திற்கு மிகவும் பக்கபலமாய் அமைந்துள்ளது.
இன்றைய நாட்டு நடப்புக்களை குடும்பத்தினருக்காக அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். சில நெருடல்கள் இருந்தாலும் ‘ஏ’ சான்றிதழ் படம் என்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படம்தான்.
Tags: hot spot, hot spot review, vignesh karthik