ரெபல் - விமர்சனம்

23 Mar 2024

நிகேஷ் ஆர்எஸ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

மூணார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலைப் பற்றிச் சொல்லியிருக்கும் படம். தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியை மாநிலப் பிரிவினையின் போது கேரளா எடுத்துக் கொண்டது. அங்கிருந்து பாலக்காடு கல்லூரியில் படிக்கச் செல்லும் தேயிலைத் தோட்ட தமிழ் மாணவர்கள், கேரள மாணவர்களால் எவ்வளவு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. பதை பதைக்கும் விதத்தில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நிகேஷ். 80களில் நடக்கும் கதையாக ஒரு பீரியட் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

மூணார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஏழ்மையில் இருப்பவர்கள். குறைந்த கூலிக்கு வேலை செய்வதை விட தங்களது வாரிசுகள் படித்து வளம் பெற வேண்டும் என அவர்களது பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அங்கிருந்து ஜிவி பிரகாஷ்குமார், ஆதித்யா, வினோத் ஆகியோர் பாலக்காடு அரசு கல்லூரிக்கு படிக்கப் போகிறார்கள். தமிழ் மாணவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் கேரள இளைஞர்கள் அதிகம் உள்ள கல்லூரி அது. மாணவர் தலைவர் கூட அப்படியே நடக்க படிக்கச் சென்றவர்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். அதில் ஆதித்யா கொல்லப்படுகிறார். அதனால், கோபமடையும் ஜிவி பிரகாஷ், கேரள மாணவர்களுக்கு எதிராக என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


தமிழர்களைப் பற்றிய வசனங்கள் படத்தில் பல இடங்களில் இருக்கிறது. அதே சமயம் தமிழ் மாணவர்களை, மலையாள மாணவர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார்கள் என்ற காட்சிப்படுத்துதலும் உள்ளது. அக்கல்லூரியில் உள்ள பெரும்பான்மையான மலையாள மாணவர்கள் இப்படித்தான் என்பது போன்ற காட்சியமைப்பு கொஞ்சம் அதிர்ச்சியைத் தருகிறது.

கதிர் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என படத்திற்குப் படம் நிரூபித்து வருகிறார். ஜிவியின் காதலியாக மமிதா பைஜு. ஆரம்பக் காதல் காட்சிகள் தரவி அதன்பின் சும்மா வந்து போகிறார். வினோத், ஆதித்யா, கருணாஸ், ஆண்டனி ஆகியோரது கதாபாத்திரங்களும் நடிப்பும் நேர்த்தி.

மலையாள மாணவர்களாக கொடூரமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார்கள் வெங்கிடேஷ், ஷாலு ரஹீம். ஜிவியின் அப்பாவாக சில காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார் சுப்பிரமணிய சிவா.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசை குறிப்பிட வேண்டிய ஒன்று. சமீபப் படங்களில் அவருடைய பின்னணி இசையில் பெரும் மாற்றம் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன் இயக்குனரின் உற்ற தோழர்களாய் இருந்திருக்கிறார்கள்.

கல்லூரி அரசியல், மொழி அரசியல், இன உணர்வு என வழக்கமான மசாலா படங்களிலிருந்து மாறுபட்டு கொடுத்திருக்கிறார்கள். இன வன்மத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Tags: rebel, gv prakashkumar, mamitha baiju

Share via: