காமி (தெலுங்கு) - விமர்சனம்

13 Mar 2024

வித்யாதர் ககிடா இயக்கத்தில், நரேஷ் இசையமைப்பில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபினயா மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 8ம் தேதி தெலுங்கில் வெளியான படம்.

மூன்று தனித்தனி கதைகளாக நகரும் திரைக்கதை, கிளைமாக்சில் ஒரே கதையாக இணைவதுதான் இந்தப் படம். ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் அளவிற்கு இப்படத்தை இயக்கியிருக்கிறார் வித்யாதர்.

விஷ்வக் சென் ஒரு அகோரி. மனிதர்கள் யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு மயக்கம் வந்துவிடும். அதைக் குணப்படுத்த அபூர்வ காளான் வகைச் செடியான ‘மாலி பாத்ரா’ என்ற செடியைத் தேடி துரோணகிரி மலைக்குச் செல்கிறார்.

ஒரு கிராமத்தில் தேவதாசியாக இருக்கும் அபிநயாவின் மகளை அடுத்த தேவதாசியாக ஆக்க அவரது மகளான சிறுமி ஹரிகாவை ஊரார் தேடுகிறார்கள்.

ஒரு பிரம்மாண்டமான மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் மனிதர்கள் மீது ஒரு டாக்டர்கள் குழுவினர் ஏதோ ஒரு சோதனையை மேற்கொள்கிறார்கள். பலர் அதில் சிறைபட்டுள்ளார்கள். அங்கிருந்து ஒரு இளைஞன் தப்பிக்க நினைக்கிறான்.

மேலே சொன்ன இந்த மூன்று கதைகளும் கிளைமாக்ஸ் முன்பாக ஒன்றாக சேர்ந்து ஒரு முடிவைத் தொடுகிறது. அது என்ன என்பதுதான் மீதிக் கதை.

அகோரி சங்கர் கதாபாத்திரத்தில் நாயகன் விஷ்வக் சென். குறைவான வசனங்கள், தவிப்பான முகபாவங்கள் என அக்கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். யார் தொட்டாலும் அவருக்கு ஏற்படும் மயக்கத்தைத் தவிர்க்க மிகப் பெரும் ரிஸ்க் எடுத்து ஐஸ் மலைகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்.

அந்தப் பயணத்தில் அவருக்கு உறுதுணையாக சாந்தினி சௌத்ரியும் செல்கிறார். அவருக்கும் அந்த அபூர்வ காளான் தேவைப்படுகிறது. அடுத்த தேவதாசியாக ஆக்க கிராம மக்கள் முயற்சிக்கும் சிறுமி கதாபாத்திரத்தில் ஹரிகா. கிராமத்து சிறுமியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். டாக்டர்கள் நடத்தும் மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞராக பரிதாபப்பட வைக்கிறார் முகம்மதுசமது.

நரேஷ் குமரன் பின்னணி இசை, விஷ்வந்த் ரெட்டி ஒளிப்பதிவு, சுனில் ராஜு சின்டா விஎப்எக்ஸ் ஆகியவை குறிப்பிட வேண்டியவை.

மாறுபட்ட கதை, அதை திரைக்கதை மூலமும் படமாக்கம் மூலம் வித்தியாசமான படமாகக் கொடுக்க இயக்குனர் உள்ளிட்டவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். மெதுவான திரைக்கதை படத்திற்குக் கொஞ்சம் மைனஸ். திரைக்கதையில் ஒரு குழப்ப நிலையே மிஞ்சுகிறது. அதைத் தவிர்த்து ரசிகர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் சஸ்பென்ஸை உடைத்து உண்மையைச் சொல்லி இருக்கலாம்.


Tags: gaami, gaami review, vishwaksen,

Share via: