அரிமாபட்டி சக்திவேல் - விமர்சனம்
09 Mar 2024
ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில், மணி அமுதவன் இசையமைப்பில், பவன், சார்லி, மேக்னா எலன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அரிமாபட்டி. அந்த ஊரில் வசிக்கும் மக்கள் அவர்களுக்கென ஒரு கட்டுப்பாட்டை வைத்து அதன்படி வாழ்ந்து வருகிறார்கள். அந்த ஊர் மக்கள், காதல் திருணமோ, சாதி மாறிய திருமணமோ செய்து கொள்ளக் கூடாது. அப்படி ஒன்று நடந்தால் சம்பந்தப்பட்டவர்களை ஊரைவிட்டே தள்ளி வைத்து, எக்காரணம் கொண்டும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த பவன். பக்கத்து ஊரைச் சேர்ந்த மேக்னா எலனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்திய கதை. அந்த கிராமத்தில் இன்னமும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். இப்படத்தின் கதாநாயகன் பவன் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர். காதல் திருமணம் செய்து கொண்டால் அவர் சந்தித்த பிரச்சனைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
அவருக்கு நன்கு தெரிந்த கதைக்களம், கதாபாத்திரம், சந்தித்த பிரச்சனை என்பதால் அதில் இயல்பாக நடித்திருக்கிறார். நிஜத்தில் நடந்ததை நிழலில் காட்டும் பாக்கியம் சிலருக்குத்தான் கிடைக்கும். அது பவனுக்குக் கிடைத்துள்ளது. அவரது காதலியாக மேக்னா எலன். இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார்.
பவனின் அப்பாவாக சார்லி. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது அனுபவ முத்திரையைப் பதிப்பவர். இந்தப் படத்திலும் அப்படியே யதார்த்தமாய் நடித்திருக்கிறார். அவர் மீது நாம் அனுதாபப்படும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ஜேபி மேனன் ஒளிப்பதிவு, கிராமத்துக் கதைகளுக்குரிய விதத்தில் இயல்பாய் அமைந்துள்ளது. மணி அமுதவன் இசை நிறைவு.
2 கே யுகத்திலும் இப்படி ஒரு கிராமமா என ஆச்சரியமும் அதிர்ச்சியும் வருகிறது. ஒரு உணர்வுபூர்வமான கதையை இன்னும் அழுத்தமாய் கொடுத்திருந்தால் அரிமாபட்டி அசத்தல்பட்டியாக இருந்திருக்கும்.
Tags: arimapatti sakthivel, அரிமாபட்டி சக்திவேல்