நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - விமர்சனம்

08 Mar 2024

பிரசாத் ராமர் இயக்கத்தில், பிரதீப் குமார் இசையமைப்பில், செந்தூர்பாண்டியன், ப்ரீத்தி கரண் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சினிமா தியேட்டர்களுக்கு நீங்கள் சென்றால் கூட்டமில்லாத தியேட்டர்களில் ‘கார்னர்’ சீட்டில் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் சில காதல் ஜோடிகள் அமர்ந்திருப்பார்கள். அப்படியான ஒரு ஜோடியைப் பற்றிய படம்தான் இது.

மதுரையில் வெட்டியாகத் திரிந்து கொண்டிருப்பவர் செந்தூர்பாண்டி. சமூக வலைத்தளங்கள் மூலம் பழக்கமான பெண்களுடன் ஊர் சுற்றுபவர். அப்படி பழக்கமான ப்ரீத்தி கரணை, அவரது பிறந்தநாளில் சந்திக்க மாயவரம் செல்கிறார். அவரை எப்படியாவது தனது வலையில் வீழ்த்த வேண்டும் என்பது அவரது எண்ணம். மாயவரம் சென்று அவரை அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார் செந்தூர்பாண்டி. ஒரு கட்டத்தில் செந்தூர்பாண்டி எதற்காக தன்னை சந்திக்க வந்துள்ளார் என்பது ப்ரீத்திக்குத் தெரிய வருகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதையின் கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் இயக்குனர் முனைப்பாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. சினிமாத்தனமில்லாத இயல்பான முகங்களையே படத்திற்குத் தேர்வு செய்துள்ளார்.



நாயகன் செந்தூர்பாண்டி, நாயகி ப்ரீத்தி கரண், நண்பன் சுரேஷ் மதியழகன் ஆகிய மூவர்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். எந்த இடத்திலும் இவர்கள் நடிக்கிறார்கள் என்பது தெரியவேயில்லை. தங்களது கதாபாத்திரங்களைப் புரிந்து கொண்டு அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் வந்து போகும் ப்ரீத்தியின் தோழிகள், வழியில் பைக் ரிப்பேர் செய்யும் ஒரு இளைஞர் ஆகியோர் கூட அப்படியே நடித்துள்ளார்கள்.

வழக்கமான சினிமா உருவாக்கத்திலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறது படக்குழு. அதற்காக ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், படத்தொகுப்பாளர் ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் மெனக்கெட்டிருக்கிறார்கள். உள்ளது உள்ளபடி காட்டும் ‘கேன்டிட்’ வகைப் படமாக்கம் சிறப்பாக இருந்தாலும் ஒரு குறும்படம் பார்க்கும் ‘பீலிங்’ வருகிறது. அதை மாற்ற யோசித்திருக்கலாம்.

செந்தூர்பாண்டி போன்ற இளைஞர்களுக்கான பாடம் என்னவென்பதை கிளைமாக்சில் அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். சில குறைகள் இருந்தாலும், ‘ஏ’ சான்றிதழ் படமாக இருந்தாலும் சிலருக்கான பாடம் இந்தப் படம்.

Tags: Nalla Perai Vaanga Vendum Pillaigale

Share via: