கார்டியன் - விமர்சனம்
08 Mar 2024
சம்பத் - குரு சரவணன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஹன்சிகா, பிரதீப் ராயன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தன்னை அநியாயமாகக் கொன்றவர்களை ஹன்சிகாவின் உடலுக்குள் புகுந்து பழி வாங்கும் ஒரு பேயின் கதைதான் இந்தப் படத்தின் கதை. சிறு வயதிலிருந்து தான் விருப்பப்படுவது எதுவுமே கிடைக்காமல் இருப்பவர் ஹன்சிகா. அதற்கு தனக்கு அதிர்ஷ்டமில்லை என்றும் நினைக்கிறார். ஆனால், பேய் அவருக்குள் புகுந்ததும் அவர் நினைப்பதெல்லாம் நடக்கிறது. அதற்காகவே, அந்தப் பேய் தனக்குள் இருக்கவும் சம்மதிக்கிறார். அதோடு பேயின் ஒரு ஆசையையும் அவர் நிறைவேற்றி இருக்கிறார்.
ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம். ஒரு பேய் கதை தனக்குப் பொருத்தமாக இருக்கும் என அவர் நினைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. அழகான ஹன்சிகாவை ஆக்ரோஷமான பேயாகப் பார்ப்பது நமக்கு அதிர்ச்சியாகவே உள்ளது. இருந்தாலும் கொஞ்சம் இயல்பான நடிப்பாலும், கொஞ்சம் ஓவரான நடிப்பாலும் படத்தை தன் மீது சுமந்திருக்கிறார் ஹன்சிகா.
ஹன்சிகாவின் பிளாஷ்பேக் என இடைவேளைக்கு முன்பாகவும், ஹன்சிகாவின் உடலுக்குள் புகுந்த ஆவி பற்றி இடைவேளைக்குப் பின்பாகவும் இரண்டு பிளாஷ்பேக் காட்சிகள் வருகிறது. பழி வாங்கும் ஆவியின் பிளாஷ்பேக் சென்டிமென்ட்டாக அமைந்துள்ளது. அம்மா, மகள் பாசம் நெகிழ்வாக உள்ளது.
ஹன்சிகாவின் காதலராக கொஞ்ச நேரமே வருகிறார் பிரதீப் ராயன். படத்தில் நான்கு வில்லன்கள். அந்தக் கால வில்லன்களை ஞாபகப்படுத்துகிறார்கள் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத். மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை காமெடி வொர்க்அவுட் ஆகவில்லை.
பேய்ப் படங்களுக்கென ஒரு டெம்ப்ளேட் இசை உண்டு. அதை சரியாகவே செய்திருக்கிறார் சாம் சிஎஸ். ஹன்சிகா கதாநாயகி என்பதால் அதிக செலவு செய்து கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கலாம்.
Tags: Guardina, Hansika, Sam CS