ஜோஷ்வா, இமை போல் காக்க - விமர்சனம்
02 Mar 2024
கௌதம் மேனன் இயக்கத்தில், கார்த்திக் இசையமைப்பில், வருண், ராஹி, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சென்னைக்கு வரும் அமெரிக்க வாழ் தமிழ் வக்கீலான ராஹியை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார் காண்டிராக்ட் கில்லர் ஆன வருண். ராஹியும் வருணைக் காதலிக்க ஆரம்பிக்க, ராஹி அமெரிக்கா கிளம்பும் போது தான் ஒரு காண்டிராக்ட் கில்லர் என்ற உண்மையை சொல்கிறார் வருண். அதனால், ஆத்திரமடையும் ராஹி ‘பிரேக் அப்’ சொல்லிவிட்டு போய்விடுகிறார். ஒரு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவனின் கைது வழக்கில் அவருக்கு எதிராக ராஹி வாதாட இருக்கிறார். அதனால், ராஹியைக் கொல்ல சில காண்டிராக்ட் கில்லர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து ராஹியை வருண் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கௌதம் மேனன் படம் என்றாலே என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அது அனைத்துமே இந்தப் படத்திலும் இருக்கிறது. ஸ்டைலான மேக்கிங், அடிக்கடி ஆங்கிலம் பேசும் கதாபாத்திரங்கள் ஆகியவைதான் இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அடிக்கடி வந்தாலும் ஒவ்வொரு சண்டைக் காட்சியுமே பிரமாதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் யானிக் பென்னுக்கு தனியான பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.
காண்டிராக்ட் கில்லர் ஆக வருண். சர்வதேச அளவில் காண்டிராக்ட் எடுத்து கொலைகளைச் செய்யும் ஒருவர். அவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று நம்புமளவிற்கு நடித்திருக்கிறார். அவருடைய உயரமும், உடல்மொழியும் அதற்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது.
ராஹியின் கதாபாத்திரமும், அதில் அவருடைய நடிப்பும் குறை சொல்ல முடியாதவை. ஆனால், வருணுக்கு ஜோடி என்பது பொருத்தமாக இல்லை.
அடிக்கடி வந்து போகும் காண்டிராக் கில்லர்கள்தான் படத்தின் வில்லன்கள். அப்படியான ஒரு லோக்கல் கில்லர் ஆக வருகிறார் கிருஷ்ணா. பி அன்ட் சி ரசிகர்களுக்கும் படம் போய் சேர வேண்டும் என இவரது கதாபாத்திரத்தை நீட்டித்து காட்சியமைத்திருக்கிறார்கள்.
கௌதம் மேனன் படங்களில் ஒரு பாடலாவது மனதில் நின்றுவிடும். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் கார்த்திக் அதை செய்யத் தவறியிருக்கிறார். பின்னணி இசையில் கவனம் செலுத்தியுள்ளார். சில இடங்களில் மட்டும் அதிக சத்தம்.
ஒரு கௌதம் மேனன் படம் போல முழுமையான படமாக இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளுக்காக பார்க்கும்படியான ஒரு படமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் செலுக்கியிருக்கலாமோ என்றே எண்ண வைக்கிறது.
Tags: joshua, gautham menon, varun