போர் - விமர்சனம்
02 Mar 2024
பிஜாய் நம்பியார் இயக்கத்தில், ஹரிஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் காட்கிண்டி இசையமைப்பில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராஜன், டிஜே பானு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பல கல்லூரிக் கதைகளைப் பார்த்த நமக்கு ஒரு பல்கலைக்கழகத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார். அந்தத் தனியார் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர்தான் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்கள். யார் டாக்டர் படிக்கிறார்கள், யார் மற்ற கோர்ஸ் படிக்கிறார்கள், யார் முன்னாள் மாணவர்கள் என்று புரியாத அளவிற்கு அவை அமைந்துள்ளன. அதனாலேயே ஆரம்பத்தில் கடும் குழப்பம் ஏற்படுகிறது.
பாண்டிச்சேரியில் இருக்கும் செயின்ட் மார்ட்டின் பல்கலைக் கழகத்தில் சீனியர் மாணவரான அர்ஜுன் தாஸ், மாணவியான சஞ்சனா நடராஜன் ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் சீனியர்கள் கூட்டமே இருக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தில் டாக்டருக்குப் படிக்க முதலாமாண்டில் சேர்கிறார் காளிதாஸ் ஜெயராம். இவருக்கும், அர்ஜுன் தாஸுக்கும் பள்ளியில் படித்த காலத்திலேயே ஒரு பகை உள்ளது. அப்போது சிறிய வயது என்பதால் எதுவும் செய்ய முடியாத காளிதாஸ், இப்போது அர்ஜுன் தாஸைப் பழி வாங்க நினைக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
கல்லூரியைச் சுற்றிய கதை என்றாலே காதல் இருக்கும், ரவுடித்தனம் இருக்கும், சீனியர் ஜுனியர் மோதல் இருக்கும், நட்பு இருக்கும், ஏமாற்றம் இருக்கும். இந்தப் படத்தில் அது எல்லாமும் இருக்கிறது. கூடவே இந்தக் கால சினிமா வழக்கப்படி போதைப் பொருள் பயன்பாடு, அதை பல்கலைக்கழகத்தில் விற்பனை செய்யும் டாக்டருக்குப் படத்தின் கதாநாயகி ஆகியவை புதிதானது.
சீனியர் மாணவராக அர்ஜுன் தாஸ். அவர் ஒரு குரல் கொடுத்தாலே ஒட்டு மொத்த சீனியர்களும் அவர் பின்னால் வந்துவிடுகிறார்கள். அந்த அளவிற்கு படத்தில் கெத்தாக சுற்றிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் சென்டிமென்ட் கலந்த கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் உள்ளது. இவருக்கான ஹீரோயிசத்தை இன்னும் அதிகமாக வைத்திருக்கலாம்.
ஒரு ‘டோன்ட் கேர்’ கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம். முதலாமாண்டு மாணவராக இருந்தாலும் வந்த நாளிலிருந்தே சீனியர்களை வெளுத்து வாங்குகிறார். தனது பள்ளி காலத்து எதிரியான அர்ஜுன் தாஸும் இங்கு சீனியராக இருப்பதால் அவரை வெறுப்பேற்றத் துடிக்கிறார். ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக்கை நிறைய ஞாபகப்படுத்துகிறது இவரது கதாபாத்திரம். சாப்ட் ஆக நடித்து வந்த காளிதாஸ் ‘ரப் அன்ட் டப்’ கதாபாத்திரங்களுக்கும் செட் ஆவேன் என உணர்த்தியிருக்கிறார்.
டாக்டருக்குப் படிக்கும் மாணவியே போதைப் பொருள் விற்பதெல்லாம் ரொம்ப ஓவர். அப்படியான கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன். ஜுனியராக இருந்தாலும் காளிதாஸின் காதல் வலையில் விழுந்துவிடுகிறார். ‘ஜிகர்தண்டா 2’வில் நடித்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார்.
மாணவர்களுக்காகக் குரல் கொடுக்கும் முன்னாள் மாணவியாக டிஜே தனா. பல்கலைக்கழகத் தேர்தலில் நிற்கும் வாரிசு அரசியல் மாணவியாக அம்ருதாவை எதிர்ப்பது மட்டுமே இவரது வேலையாக உள்ளது. இன்னும் சில கதாபாத்திரங்களுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஹரிஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கௌரவ் காட்கிண்டி ஆகியோரின் பின்னணி இசை ஓகே. ஜிம்ஷி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிசௌசா ஒளிப்பதிவு, பிரேம்குமார் படத்தொகுப்பு போருக்கான வீரர்கள்.
இப்படி ஒரு பல்கலைக்கழகம், மாணவர்கள் எங்கு இருப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. அனைத்துமே அந்நியமாக இருக்கிறது. அந்தக் கற்பனைக்குள் புகுந்தால் மட்டுமே படத்தை ரசிக்க முடியும்.
Tags: por, bejoy nambiar, arjun das, kalidas jayaram