அதோ முகம் - விமர்சனம்

02 Mar 2024

சுனில் தேவ் இயக்கத்தில், எஸ்பி சித்தார்த், சைதன்யா பிரதாப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஊட்டியில் நடக்கும் ஒரு க்ரைம் திரில்லர் கதை. இன்றைய மொபைல் ஆப் நுட்பத்தை வைத்து ஒரு கதை அமைத்து அதை சுவாரசியமான திரைக்கதையுடன் பரபரப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுனில் தேவ்.

தனது அப்பாவின் நண்பர் குடும்பத்தின் ஊட்டி எஸ்டேட் ஒன்றை பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறார் சித்தார்த். அவருடைய மனைவி சைதன்யாவுக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, ஏமாந்து போவார். புது சர்ப்ரைஸ் ஒன்றை அடுத்து தரலாம் என நினைத்து மனைவி சைதன்யாவின் மொபைலில் ஒரு ‘ஹிட்டன் ஆப்’பை வைத்து அதன் மூலம் ‘கேன்டிட்’ வீடியோக்களை எடுக்கிறார். அதன் மூலமாக மனைவி யாருடனோ தொடர்பில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து வேவு பார்க்கையில் மனைவியின் நடத்தை மீதே சந்தேகப்படுகிறார் சித்தார்த். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

ஒரு படத்தின் வெற்றிக்கு கதைக் கரு முக்கிய காரணமாக இருந்தாலும், அந்தக் கதையைச் சுற்றி அமைக்கப்படும் திரைக்கதையும் மிக முக்கியமானது. இந்தப் படத்தின் திரைக்கதையில் அடுத்தடுத்து வரும் திருப்பங்களை சுவாரசியமாய் அமைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர். கடைசி வரை அந்த சுவாரசியத்தையும் சஸ்பென்சையும் காப்பாற்றியிருக்கிறார்.

மனைவியின் மொபைலில் விளையாட்டாக ஹிட்டன் ஆப் ஒன்றை வைக்கப் போய் அதன் மூலம் மனைவியின் நடத்தை பற்றி அறிந்து தவிக்கும் அப்பாவி கணவன் கதாபாத்திரத்தில் சித்தார்த். எந்தக் கொலையும் செய்யாதவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலைக் குற்றவாளி ஆக்கப்பட்டு ஓட ஆரம்பிக்கிறார். தான் ஒரு நிரபராதி என நிரூபிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. தனது கதாபாத்திரத்தில் நிறைவாய் நடித்திருக்கிறார் சித்தார்த்.

நாயகன் கதாபாத்திரத்திற்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரமாக நாயகி சைதன்யாவின் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. போகப் போக சைதன்யாவின் கதாபாத்திரம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பது நமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நடிக்கத் தெரிந்த நடிகைகள் கிடைத்துவிட்டால் அதுவே படத்திற்குப் பாதி வெற்றி.

சரண் ராகவன் பின்னணி இசை, அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு இந்த முகத்தின் இரண்டு கண்களாக அமைந்துள்ளது. குழப்பமில்லாத விதத்தில் தெளிவான படத்தொகுப்பு செய்திருக்கிறார் விஷ்ணு விஜயன்.

இந்த ஆண்டு இதுவரை வந்த படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு படம் என இந்த ‘அதோ முகம்’ படத்தைத் தாராளமாகப் பாராட்டலாம்.

Tags: atho mugam, sunil dev

Share via: