சத்தமின்றி முத்தம் தா - விமர்சனம்
02 Mar 2024
ராஜ்தேவ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பழைய நினைவுகளை மறந்த கதாநாயகி, அவளைக் காப்பாற்றத் துடிக்கும் கதாநாயகன், மனைவியை ஏமாற்ற நினைக்கும் வில்லன் என ஒரு க்ரைம் கதைக்குரிய விஷயங்களைச் சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ் தேவ். நடிகர்களின் டிராமாத்தனமான நடிப்புதான் இந்தப் படத்தின் குறையாக அமைந்துவிட்டது.
கதாநாயகி பிரியங்கா திம்மேஷ் அவரது வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவரால் விரட்டப்படுகிறார். சாலையில் வரும் பிரியங்காவை ஒரு வாகனம் மோதிவிட்டு சென்றுவிடுகிறது. அவரைக் காப்பாற்றுகிறார் ஸ்ரீகாந்த். மருத்துவமனையிலும் சேர்க்கிறார். பிரியங்காவுக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. பிரியங்காவின் கணவர் தான்தான் என ஸ்ரீகாந்த் பொய் சொல்கிறார். ஒரு கட்டத்தில் அது பொய் என பிரியங்காவுக்குத் தெரிய வருகிறது. ஸ்ரீகாந்த் ஏன் அப்படி சொன்னார், பிரியங்கா உண்மையில் யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கான்டிராக்ட் கில்லர் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த். ஆக்ஷன் கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் அதிகம் நடித்ததில்லை. இந்தப் படத்தில் தன்னை ஒரு கில்லர் என ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள என்னென்னமோ செய்கிறார். பழைய நினைவுகளை மறந்த அப்பாவி கதாநாயகியாக பிரியங்கா. அடிக்கடி பதட்டப்பட்டுக் கொண்டும், அழுது கொண்டும் நடித்திருக்கிறார்.
பிரியங்கா பற்றிய வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக ஹரிஷ் பெரடி. அவருடைய நடிப்பு மிகவும் க்ளிஷேவாக அமைந்துள்ளது. வில்லனாக பிரியங்காவின் கணவராக வியான். மனைவியின் சொத்துக்களை அபகரிக்க சில பல வேலைகளைச் செய்கிறார். 80களின் வில்லன் போல செட்டப் எல்லாம் வைத்திருக்கிறார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குனர் கேட்டதை செய்து கொடுத்திருக்கிறார்கள்.
கதையாகப் பார்த்தால் சத்தமாகவே இருக்கிறது, ஆனால், முத்தத்தை இன்னும் அழுத்தமாகத் தந்திருக்கலாம்.
Tags: sathamindri mutham tha