ரணம் அறம் தவறேல் - விமர்சனம்

25 Feb 2024

ஷெரிப் இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில், வைபவ், தன்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு க்ரைம் திரில்லர் படத்தை தனது முதல் படமாக விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஷெரிப். பல க்ரைம் படங்களில்  போலீஸுக்கு உதவ சிறிய கதாபாத்திரமாக வந்து போகும் ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து, அதைச் சுற்றி யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்திருப்பதே படத்திற்கு பலம்.

வைபவ் நன்றாக ஓவியம் வரைபவர். கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த உடல்களை, அவர்கள் எப்படி இருப்பார்கள் என தத்ரூபமாக ஓவியமாக வரைந்து கொடுப்பவர். அவரது உதவியால் காவல் துறையினர் பல வழக்குகளை முடிக்க வைப்பவர். சென்னை, மாதவரம் காவல் நிலைய எல்லையில் அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் தனியே, கால்கள் தனியே, கைகள் தனியே, உடல் தனியே என ஆங்காங்கே வைக்கப்படுகிறது. அந்தக் கொலைகளைப் பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்க வைபவ் எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வைபவ் நடிப்பில் வெளிவந்துள்ள 25வது படம். இதற்கு முந்தைய படங்களை விடவும் இந்தப் படத்தில் வைபவ் கதாபாத்திரமும், அதில் அவரது நடிப்பும் பாராட்டும்படி அமைந்துள்ளது. அமைதியான ஆனால், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்தை மீறி அவரது நடிப்பு எந்த இடத்திலும் வெளிப்படவில்லை. அந்த எல்லைக்குள்ளேயே யதார்த்தமாய் நிற்கிறது.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரா தன்யா ஹோப். அடையாளம் தெரியாத கொலைகளைப் பற்றி விசாரிக்கிறார். போலீஸ் கதாபாத்திரம் என்றாலே ஒரு மிடுக்கு, ஒரு உடல்மொழி, ஒரு கம்பீரம் இயல்பாக வர வேண்டும். அது தன்யாவிடமும் வந்துள்ளது.

இடைவேளைக்குப் பின் நந்திதா ஸ்வேதா தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். டீன் ஏஜ் வயது மகளை இழந்த சோகத்தில் அவர் தவிப்பது கலங்க வைக்கிறது. வைபவ் காதலியாக பிளாஷ்பேக்கில் சரஸ் மேனன். போலீஸ்காரராக சுரேஷ் சக்கரவர்த்தி.

அரோல் கொரேலியின் பின்னணி இசை படத்தின் பரபரப்பை அதிகம் கூட்டுகிறது. சில இடங்களில் மட்டும் சத்தம் அதிகமாய் ஒலிக்கிறது. பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவில் லைட்டிங் குறிப்பிட வேண்டிய ஒன்று. இடைவேளைக்குப் பின்னரான காட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் படத்தொகுப்பு செய்திருக்கிறார் முனிஸ்.

கொலைக் குற்றவாளி யார் என்பதைக் காட்டாமலேயே கடைசி வரை அந்த சஸ்பென்ஸை எந்த யூகத்திற்கும் வர முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் முக்கிய திருப்பங்கள் வருகிறது.

Tags: ranam, vaibhav

Share via: