வித்தைக்காரன் - விமர்சனம்
25 Feb 2024
வெங்கி இயக்கத்தில், விபிஆர் இசையமைப்பில், சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
படத்தின் தலைப்பைப் பார்த்ததும் படத்திலும் சரியான வித்தை செய்திருப்பார்களோ என்று யோசிக்க வைத்தது. ஆனால், தலைப்பைத் தேடித் தேர்வு செய்த அக்கறையை படத்திலும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மேஜிக் நிபுணர் ஆக இருக்கும் சதீஷ். சென்னையின் மூன்று முக்கிய கடத்தல் புள்ளிகளிடம் நெருங்கி அவர்களுக்கு உதவுவதாகச் சொல்கிறார். அவரது பேச்சைக் கேட்டு தங்கக் கடத்தல் தொழில் செய்யும் சுப்பிரமணிய சிவா, கள்ளப் பணத்தைக் கைமாற்றும் ஆனந்தராஜ், வைரக் கடத்தல் தொழில் செய்யும் மதுசூதனன் ஆகியோர் சேர்த்துக் கொள்கிறார். இந்த மூன்று புள்ளிகளும் ஒரு காலத்தில் ஒன்றாகத் தொழில் செய்தவர்கள். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். அவர்களுக்கு அவர் அப்படி உதவி செய்யக் காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மூன்று விதமான கடத்தல் தொழில் செய்பவர்கள், மேஜிக் நிபுணரான நாயகன், பத்திரிகையாளரான கதாநாயகி என கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டு அதற்கான திரைக்கதையை காமெடியாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். படத்தை சீரியசாகப் பார்ப்பதா அல்லது சிரிக்க முடியாத காட்சிகளைப் பார்த்து சிரிப்பதா என தவிக்கவிட்டுள்ளார் இயக்குனர்.
கதாநாயகனாக நடித்த முந்தைய படங்களில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற சதீஷ் இந்தப் படமும் தனக்கு திருப்பத்தைக் கொடுக்கும் என நம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். அவருக்கேற்ற விதத்தில் காட்சிகளை அமைக்கத் தவறிவிட்டார் இயக்குனர். க்ரைம் விஷயங்களை தேடி சேகரித்து எழுதும் பத்திரிகையாளராக சிம்ரன் குப்தா. குறிப்பிடும்படியான காட்சிகள் இவருக்கும் இல்லை.
காமெடி கலந்த வில்லனாக கலக்கும் ஆனந்தராஜ் இந்தப் படத்தில் ஆங்காங்கே மட்டும் சிரிக்க வைக்கிறார். மற்ற வில்லன்களாக சுப்பிரமணிய சிவா, மதுசூதனன் வசனம் பேசி மட்டுமே மிரட்ட முயற்சிக்கிறார்கள்.
இயக்குனர் வித்தை புரிவார் என்ற நம்பிக்கையுடன் இசையமைப்பாளர் விபிஆர், ஒளிப்பதிவாளர் யுவகார்த்திக் ஆகியோர் அவருக்குக் கை கொடுத்திருக்கிறார்கள்.
கதையாகச் சொன்னால் பரவாயில்லையே எனத் தோன்றினாலும் திரைக்கதையில் வித்தை புரியாததால் வித்தில்லாமல் போய்விட்டது.
Tags: vithaikaran