பர்த்மார்க் - விமர்சனம்
25 Feb 2024
விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஷபீர் கல்லரக்கல், மிர்னா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
இயற்கை முறையில் குழந்தை பிறப்பு என்ற ஒரு நல்ல விஷயத்தை வைத்துக் கொண்டு அதைச் சுற்றி சந்தேக புத்தி கொண்ட கணவன், தவிக்கும் மனைவி என திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
ஷபீர், மிர்னா இருவரும் கணவன் மனைவி. ராணுவத்தில் அதிகாரியாக இருக்கும் ஷபீர் தனது கர்ப்பிணி மனைவியான மிர்னாவை மலைப் பிரதேசத்தில் உள்ள இயற்கை முறை குழந்தை பிறப்பு மையம் ஒன்றிற்கு அழைத்து வருகிறார். அந்த சிகிச்சை முறை பிடிக்காத நிலையில், கணவன் தன் மீது சந்தேகப்படும் நிலையில் என்ன செய்வது என்று தவிக்கிறார் மிர்னா. இதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ராணுவத்தில் அதிகாரியாக வேலை பார்த்தாலும் அங்குள்ள போர் சூழலில் மன ரீதியாக ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டவராக ஷபீர். அதோடு மனைவி மீதும் சந்தேகப்பட்டு அதனாலும் மனதளதில் பாதிக்கப்படுகிறார். திடீரென நல்லவராகவும், திடீரென கெட்டவராகவும் மாறும் ஒரு கதாபாத்திரம். மனைவியை பாசத்திற்காக பிரசவத்திற்காக அழைத்து வந்து, அங்கு விபரீதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவரது கதாபாத்திரத்தின் முரணாக உள்ளது.
மிதமான அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் மிர்னா. அவரது கர்ப்ப வயிறை நிஜ வயிறு போலவே ‘புரோஸ்தடிக்’ மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பக்கம் கர்ப்ப கால வலி, இன்னொரு பக்கம் இயற்கை மைய சிகிச்சை, மற்றொரு பக்கம் கணவனின் சந்தேகம். இதையெல்லாம் சமாளிக்கும் நடிப்பில் மிர்னாவின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் மிரள வைத்துள்ளது.
இயற்கை மையத்தில் மருத்துவராக இருக்கும் பொற்கொடி, உதவியாளராக இருக்கும் தீப்தி, மையத்தின் காவலரான இந்திரஜித் ஆகிய துணைக் கதாபாத்திரத்திரத்தில் நடித்திருப்பவர்களும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
இயற்கை மையத்தையே கொஞ்சம் மிரள வைக்கும் மையமாகக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், பரபரப்பான பின்னணி இசை அமைத்திருக்கும் விஷால் சந்திரசேகர் அவர்களது பணியைக் குறிப்பிட வைக்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் ‘மார்க்’ செய்ய வேண்டிய படமாக வந்திருக்கும்.
Tags: birthmark