பைரி - விமர்சனம்
24 Feb 2024
ஜான் கிளாடி இயக்கத்தில், அருண் ராஜ் இசையமைப்பில் சைத் மஜீத், மேக்னா எலன், சரண்யா ரவிச்சந்திரன், விஜி சேகர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
நாகர்கோவில் பகுதியில் நடக்கும் புறா வளர்ப்பு, புறா பந்தயம் ஆகியவற்றை மையமாக வைத்து மண் சார்ந்த ஒரு படைப்பாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி. வட்டார வழக்கு, வட்டார வாழ்வியலைச் சொல்லும் படங்களையும் கொடுக்கும் புது இயக்குனர்கள் தமிழில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
தங்கள் ஊரில் நடக்கும் புறா பந்தயம் மீது அதிக ஆர்வத்துடன் இருப்பவர் சைத் மஜீத். அவருக்கும் புறா வளர்த்து, அதை பந்தயத்தில் கலந்து கொள்ள வைத்து வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர லட்சியத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அம்மாவுக்கு மகன் புறா வளர்க்கவே கூடாது, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறார். அம்மா எதிர்ப்பை மீறி புறா வளர்த்து, பந்தயத்தில் கலந்து கொள்கிறார். அதனால், புறா போட்டியில் இருக்கும் ஒரு ரவுடியின் எதிர்ப்பையும், கொலை வெறி தாக்குதலுக்கும் ஆளாகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அறிமுகப் படத்திலேயே யதார்த்தமான கதாபாத்திரமும், அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தும் காட்சிகளும் கிடைப்பது ஆச்சரியம். அப்படி இந்தப் படத்தில் தனக்கு அமைந்துள்ள கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார் சையத் மஜீத்.
படத்தின் வில்லன் சுயம்பு கதாபாத்திரத்தில் வினு லாரன்ஸ். அவரது உருட்டல், மிரட்டல் சரியான வில்லத்தனம். ஊரின் அமைதிக்காக அனைவரையும் சாந்தப்படுத்தும் கதாபாத்திரத்தில் ரமேஷ் ஆறுமுகம். நாயகனின் அம்மாவாக விஜி சேகர். நாயகனின் நண்பனாக படத்தின் இயக்குனர் ஜான் கிளாடி. இப்படத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய நட்சத்திரங்கள்.
படத்தில் கதாநாயகிகளுக்கான வேலை அதிகமில்லை. சையத் அவருடன் படித்த மேக்னாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஆனால், அவரோ சையத்தை சீண்டுவதேயில்லை. சில பல வருடங்களுக்குப் பிறகு திடீரென காதலிப்பதாகக் கூறுகிறார். அது நம்பும்படியாக இல்லை. முறைப்பையன் சைத்தை விழுந்து விழுந்து காதலிக்கிறார் சரண்யா. அதைக் காதலாக ஏற்க மறுக்கிறார் சையத்.
படத்தில் இயக்குனருக்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருப்பது மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள். ஒளிப்பதிவாளர் வசந்தகுமார், சிஜி செய்த சேகர் முருகன், இசையமைத்த அருண் ராஜ், படத்தொகுப்பு செய்த சதீஷ்குமார். இந்தப் படத்தின் மேக்கிங் சிறப்பாக அமைந்ததற்கு இவர்கள் முக்கியக் காரணம்.
படத்தில் எமோஷனல் காட்சிகள் நிறைய இருக்கிறது. அம்மா பாசம், உயிரையும் கொடுக்கத் துணியும் நட்பு என குறிப்பிட்டுச் சொல்லலாம். இருந்தாலும் படம் முழுவதும் புறா, புறா, புறா என புறா பந்தயத்தைச் சுற்றியே அதிகமாக நகர்வது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகியிருக்கிறது.
Tags: byri