சைரன் - விமர்சனம்

16 Feb 2024

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சென்டிமென்ட் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனிப்பட்ட ஒரு வரவேற்பு இருக்கும். அம்மா, மகன் சென்டிமென்ட் தான் தமிழ் சினிமாவில் அதிகம் காட்டப்பட்டிருக்கும். அப்பா, மகள் சென்டிமென்ட் படங்கள் குறைவுதான். இந்தப் படம் ஒரு அப்பா, மகள் சென்டிமென்ட் படம். அதை மையமாக வைத்து அதன் மேல் க்ரைம் திரில்லர், சாதிய அரசியல், சாதிய காதல் என கமர்ஷியல் பார்முலாவில் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ்.

நடுத்தர வயதுடைய ஜெயம் ரவி கொலை செய்ததாக சிறையில் 14 வருடங்களாக ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார். இந்த 14 வருடங்களில் ஒரு முறை கூட பரோலில் வீட்டிற்கு செல்லாதவர் திடீரென செல்ல சம்மதிக்கிறார். அவரது அப்பாவைப் பார்ப்பதற்காக சொந்த ஊரான காஞ்சிபுரம் செல்கிறார். அம்மாவைக் கொலை செய்ததால்தான் அப்பா சிறையில் இருக்கிறார் என்ற கோபத்தில் அவரது 15 வயது மகள் ஜெயம் ரவியை பார்ப்பதையே தவிக்கிறார். இந்நிலையில் ஊரில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கிறது. அது பற்றிய விசாரணையை இன்ஸ்பெக்டரான கீர்த்தி சுரேஷ் ஆரம்பிக்கிறார். விசாரணையில் ஜெயம் ரவிதான் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. அந்தக் கொலைகளைச் செய்தது யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. பிளாஷ்பேக்கில் மட்டுமே துறுதுறுப்பான இளைஞராக நடித்திருக்கிறார். நடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்திற்கே உரிய பொறுமை, இயல்பாகவே அவரிடம் உள்ள அந்த அப்பாவித்தனம், அந்த வயதிற்கான தோற்றம், உடல்மொழி, நிதானமான பேச்சு என திலகவர்மன் கதாபாத்திரத்தில் திருப்தியாகவே நடித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக கீர்த்தி சுரேஷ். விசாரணையில் ஒரு கைதியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பென்ட் ஆகி பின் மீண்டும் வேலையில் சேர்பவர். எப்போதுமே ஒரு பரபரப்புடனும், வேகத்துடனும் இருக்கிறார். அவர் மீது வீண் பழி சுமத்தி சஸ்பென்ட் செய்ய வைத்த அரசியல்வாதிகளே அடுத்தடுத்து கொலையாகிறார்கள். அந்தக் கொலைகளை ஜெயம் ரவிதான் செய்திருப்பாரோ என அவர் விசாரணையில் தெரிய வருகிறது. இருந்தாலும் அவர் மீதும் கூட ஒரு சந்தேகம், மேலதிகாரி டிஎஸ்பி சமுத்திரக்கனிக்கு வருகிறது. எல்லா சந்தேகத்தையும் மீறி உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தே தீருவேன் என கடமையுணர்ச்சியுடன் இருக்கிறார்.

siren movie review
‘இப்படி ஒரு போலீஸைப் பார்த்திருக்க மாட்டீங்க,’ என வசனத்தை வைத்துவிட்டு யோகிபாபுவை போலீசாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அக்கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இல்லை என்றாலும் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.

பிளாஷ்பேக்கில் ஜெயம் ரவியின் காதல் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன். கொஞ்ச நேரமே வந்தாலும் அழ வைக்கும் கதாபாத்திரம். சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் ஆகிய மூவர்தான் வில்லன்கள். அவரவர் கதாபாத்திரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளார்கள்.

ஜெயம் ரவியின் மகளாக யுவினா பர்தவி, தங்கையாக சாந்தினி, அம்மாவாக துளசி சென்டிமென்ட் கதாபாத்திரங்களாக பெண்களைக் கவர்வார்கள்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் சென்டிமென்ட் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சாம் சிஎஸ் பின்னணி இசை ‘சைரனின்’ சத்தத்தை இன்னும் கூடுதலாக்குகிறது. எஸ்கே செல்வகுமார் ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு சைரனுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறது.

சில குறைவான குறைகள் இருந்தாலம் இரண்டரை மணி நேரமும் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத விதத்தில் படத்தை பரபரப்பாக நகர்த்தியிருப்பது ரசிக்க வைத்துவிடுகிறது.

Tags: siren, jayam ravi, keerthy suresh, anupama parameswaran, gv prakash, sam cs, antony bhagyaraj

Share via: