லால் சலாம் - விமர்சனம்
10 Feb 2024
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
இன்றைய கால கட்டத்தில் நம் நாட்டிற்குத் தேவையான மத ஒற்றுமையை வலியுறுத்தி சொல்லியிருக்கும் படம். இந்துக்களும், முஸ்லிம்களும் எந்த விதமான சண்டை, சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை கிளைமாக்சில் ஒரு உணர்வுபூர்வமான, அழுத்தமான காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா.
மூரார்பாத் என்ற கிராமத்தில் இந்து மக்களும், முஸ்லிம் மக்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். ஊர் பெரியவர்கள் கூடி சொல்வதை அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள். அதனால், தங்களது அரசியல் பாதிக்கப்படுகிறது என ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகி அவர்களுக்குள் சண்டை வர வைத்து பிரிக்க நினைக்கிறார். இந்து இளைஞர்கள், முஸ்லிம் இளைஞர்கள் என தனித் தனியாக கிரிக்கெட் அணியை வைத்து ஆடும் அந்த ஊர் இளைஞர்களிடம் கிரிக்கெட் போட்டி ஒன்றை வைத்தே இருவருக்கும் மோதல் வரவைக்கிறார். ஒற்றுமையாக இருந்த ஊர் கலவர பூமியாக இந்துக்களும், முஸ்லிம்களும் பகையை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்து கிரிக்கெட் அணி கேப்டன் விஷ்ணு விஷால், முஸ்லிம் அணி கேப்டன் விக்ராந்த் கையை வெட்டும் அளவிற்கு பகை முடிகிறது. தன் மகன் விக்ராந்த் கை பறி போன அதிர்ச்சியில் அவரது அப்பா ரஜினிகாந்த் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
திரு கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் இயல்பாய் நடித்திருக்கிறார். ஆவேசமான கிராமத்து இளைஞன் கதாபாத்திரம் அவருக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. அதற்கான தோற்றம், உடல் மொழி என அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். ரஜினிகாந்த் மகனாக விக்ராந்த். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிப்பவர். தங்களது கிரிக்கெட் அணி தோற்கக் கூடாது என்பதற்காக ஊருக்குச் சென்று கிரிக்கெட் விளையாடுகிறார். அதில் நடந்த சண்டையில் கையைப் பறி கொடுத்து மிகவும் விரக்தி அடைகிறார். குறைவான வாய்ப்புகள் என்றாலும் நிறைவான நடிப்பு.
சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் என படத்தின் டைட்டிலில் வந்தாலும் படம் முழுவதுமே வருகிறார். அப்பா கதாபாத்திரம் என்றாலும் கிளைமாக்சில் ரஜினிகாந்த் பேசும் அந்த மத ஒற்றுமை வசனத்தை அவரைப் போன்ற சீனியர் ஸ்டார் பேசுவதுதான் பொருத்தமானது. அப்போது தான் அந்த வசனத்திற்கான வீச்சு மக்களிடம் சென்றடையும். சில ஹீரோயிசக் காட்சிகள் வழக்கம் போல உள்ளன. உணர்வுபூர்வமான காட்சிகளும் உண்டு.
விஷ்ணு விஷால் ஜோடியாக அனந்திகா சனல்குமார், படத்தில் காதல் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாநாயகி கதாபாத்திரம். தம்பி ராமையா, செந்தில் ஊர் பெரிய மனிதர்களாக அவர்களது அனுபவ நடிப்பைத் தந்திருக்கிறார்கள். விஷ்ணு அம்மாமவாக ஜீவிதா, விக்ராந்த் அம்மாவாக நிரோஷா மகன்கள் மீதான பாசத்தில் கலங்குகிறார்கள். அரசியல்வாதியாக நந்தகுமார், அவரது மருமகனாக விவேக் பிரசன்னா, இவர்கள்தான் படத்தின் வில்லன்கள்.
ஏஆர் ரகுமான் இசையில் “தேர்த் திருவிழா, ஜலாலி..ஜலாலி..” பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. விஷ்ணு ரங்கசாமி படத்தில் உள்ள மொத்த கூட்டத்தையும் கட்டுப்படுத்தி படமாக்கியிருக்கிறார்.
தை நடக்கும் கால கட்டம், பிளாஷ் பேக் காட்சிகள் என மாறி மாறி நகர்வதால் திரைக்கதையைப் பின் தொடர்வதில் ரசிகர்களுக்கு சற்றே குழப்பம் வருகிறது. அந்த குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம். ஒரே படத்தில் சாதி விவகாரம், மத ஒற்றுமை, கிரிக்கெட் போட்டி, கோவில் பிரச்சினை என பல பிரச்சனைகளைப் படம் பேசியிருப்பது ஓவர் டோஸ் ஆகவும் அமைந்துவிட்டது.
Tags: lal salaam, aishwarya rajinikanth, rajinikanth, vishnu vishal, vikranth