லவ்வர் - விமர்சனம்

10 Feb 2024

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், மணிகண்டன், ஸ்ரீகௌரிப்ரியா, கண்ணா ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இந்தக் காலத்திய காதலின் மற்றொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். பொசசிவ்வாக உள்ள ஒரு காதலன், தனக்கு விருப்பமானவற்றை செய்ய நினைக்கும் காதலி ஆகியோருக்கிடையேயான காதல்தான் இந்தப் படம்.

கல்லூரியில் படித்த காலத்திருந்து ஆறு வருடங்களாகக் காதலிப்பவர்கள் மணிகண்டன், ஸ்ரீகௌரிப்ரியா. கௌரிப்ரியா வேலைக்குச் செல்லும் இடங்களில் ஆண் நண்பர்களுடன் பழகுவது இயல்பாகவே கோபமான குணம் கொண்ட மணிகண்டனுக்குப் பிடிக்கவில்லை. 

கௌரி சொல்படி வேலைக்குப் போகாமல் காபி ஷாப் ஆரம்பிக்க வேண்டும் என இருக்கிறார் மணிகண்டன். இவர்களுக்கிடையே அடிக்கடி நடக்கும் சண்டை, சமாதானம் ஒரு கட்டத்தில் ‘பிரேக்அப்’ வரை செல்கிறது. அதன்பின் இருவரும் இணைந்தார்களா, பிரிந்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் காலத்துக் காதல் எப்படி இருக்கிறது என்பதை ஜாலியாக சொன்ன படம் ‘லவ் டுடே’. அதை சீரியசாகச் சொல்லியிருக்கும் படம் இது. 

மணிகண்டன், ஸ்ரீகௌரிப்ரியா இருவரது கதாபாத்திரங்களின் உருவாக்கம், அதில் அவர்களது பொருத்தமான நடிப்பு ஆகியவைதான் இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. நிஜ காதலர்கள் கூட இப்படி சண்டை போட்டுக் கொள்வார்களா என யோசிக்கும் அளவிற்கு சண்டை போடுகிறார்கள். 

அடிக்கடி சண்டை போட்டாலும் கௌரியை பேசிப் பேசி எப்படியாவது சமாதானம் செய்துவிடுகிறார் மணிகண்டன். அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசி, கௌரியை ஒரு கட்டத்தில் ‘பிரேக்அப்’ சொல்லுமளவிற்கு செய்து விடுகிறார் மணிகண்டன். பிரிந்த பின்பு காதல் இருந்தும் இல்லாமல் காட்ட இருவரும் தவிக்கும் தவிப்பும் அருமை.

காதல் கதை என்றால் நண்பர்கள் இல்லாமலா, இந்தப் படத்திலும் உண்டு. மணிகண்டனுக்கு ஒரு நண்பர், கௌரிக்கு சில தோழிகள், சில நண்பர்கள் உண்டு. உடன் வேலை பார்க்கும் கண்ணா ரவி மீது கௌரி காதல் கொள்வாரோ என யோசிக்க வைத்துவிடுகிறார் இயக்குனர். 

ஆனால், கண்ணா ‘பாய் பெஸ்ட்டி’ ஆக மட்டும் இருந்துவிடுகிறார். கௌரியின் மனதை அடிக்கடிக் கலைத்துவிடும் அந்தத் தோழிகள் எல்லா பெண்கள் கூட்டத்திலும் உண்டு.

சென்டிமென்ட்டிற்காக மணிகண்டனின் அம்மா, வேறொரு பெண்ணுடனும் குடும்பம் நடத்து அப்பா சரணவன் என சில கதாபாத்திரங்களும் உண்டு. 

ஷான்ரோல்டனின் பாடல்கள், பின்னணி இசை காதலின் அழுத்தம், பிரிவுகளைக் கடந்து போக வைக்கிறது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு உணர்வுகளின் முக்கியத்துவத்துடன் கதையோடு நகர்ந்து செல்கிறது.

மணிகண்டன், கௌரிப்ரியா சண்டை என்பது மட்டும் திரைக்கதையில் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. அந்த சண்டையின் காரணங்களை வெவ்வேறு விதமாகக் காட்டியிருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைய விஷயங்களை உணர்த்துவிட்டு முடித்து வைக்கிறது.

Tags: lover, lover review, manikandan, prabhuram vyas, gouri priya, sean roldan

Share via: