வடக்குப்பட்டி ராமசாமி - விமர்சனம்

03 Feb 2024

கார்த்திக் யோகி இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேஷு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சந்தானம் படம் என்றாலே காமெடியை எதிர்பார்த்துத்தான் மக்கள் வருவார்கள். பேய் படங்கள் மூலம் தான் பெரிய வெற்றியைப் பெற்ற சந்தானம், இந்தப் படத்தில் ஆன்மீகத்தை வைத்து காமெடி செய்திருக்கிறார்.

1974ல் நடக்கும் கதை. வடக்குபட்டி என்ற கிராமத்தில் சந்தானம் அவரது சொந்த நிலத்தில் ஒரு பானையை தெய்வமாக வணங்கும் தனது கிராமத்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். கோவில் நிலங்களை குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம் என புதிதாக வரும் தாசில்தார் தமிழ் ஆலோசனை சொல்லி அவருக்கு அதிக கமிஷன் கேட்கிறார். அதை ஏற்க மறுக்கும் சந்தானம் அவராகவே குத்தகை விட நினைக்கிறார். இதனால், ஆத்திரமடையும் தமிழ், அந்த கோயிலை மூட வைக்கிறார். அக்கோயிலை மீண்டும் திறக்க சந்தானம் முயற்சி செய்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

சந்தானம் நடிப்பு வழக்கம் போல, அவரது நகைச்சுவைத் தோரணங்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. அவர் மட்டும் நகைச்சுவை செய்யாமல் அவருடன் இருக்கும் மாறன், சேஷு ஆகியோரையும் சேர்த்து செய்ய வைத்திருக்கிறார். சில காட்சிகளில் சந்தானத்தையும் மிஞ்சி செய்திருக்கிறார்கள் இருவரும்.

படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷுக்கு அதிக வேலையில்லை. சிம்பு, தனுஷுடன் ஜோடியாக நடித்தவர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தது ஆச்சரியம்தான்.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களும் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டுள்ளன. கொஞ்சம் எரிச்சலைத் தரும் நகைச்சுவையாக ரவி மரியா, ஜான் விஜய். கூல் சுரேஷ், நிழல்கள் ரவி கூலாக சிரிக்க வைத்துள்ளார்கள். ஒரு மேஜர் கதாபாத்திரத்தை இப்படி காட்டியிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தாலும், நிழல்கள் ரவிக்கும் காமெடி வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஷான் ரோல்டன் இசையில் சந்தானம் பாட்டு ஒன்றைப் பாடி சோதிக்கிறார். காமெடி படங்களில் பின்னணி இசைக்குப் பெரிய வேலையில்லை. வடக்குபட்டி கிராமம் தான் கதையின் மையம் என்றாலும் திருமூர்த்தி அணை அருகில் செட் போட்டே படத்தை முடித்துவிட்டார்கள்.

சில இடங்களில் திரைக்கதையில் தொய்விருந்தாலும், காமெடியில் கடந்து போகிறது படம்.

Tags: Vadakkupatti Ramasamy, Santhanam, Megha Akash

Share via: