டெவில் - விமர்சனம்
03 Feb 2024
ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் இசையமைப்பில், விதார்த், பூர்ணா, திரிகுண், சுபஸ்ரீ மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
காதல் படங்கள் என்றால் மென்மையான படங்கள், கள்ளக் காதல் படங்கள் என்றால் த்ரில்லர் படங்கள், இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம்.
பூர்ணா ஏதோ ஒரு யோசனையுடன் காரை ஓட்டிக் கொண்டு செல்லும் போது எதிரே பைக்கில் வந்த திரிகுண் மீது இடித்துவிடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வைக்கிறார். அது அப்படியே ஒரு பழக்கத்தில் போய்விடுகிறது. பூர்ணா, திரிகுண் இருவரும் காதலில் விழுந்துவிட்டார்களோ என நினைக்கும் போது பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது. பூர்ணா, விதார்த் இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், பிரபல வக்கீலான விதார்த், அவரது அலுவலக உதவியாளர் சுபஸ்ரீயுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே தொடர்பில் இருப்பவர். இந்த உண்மை தெரிய வந்த அன்றுதான் திரிகுண் மீது அவர் காரை இடித்தார். கணவன் மனைவியான விதார்த், பூர்ணா இருவருமே வேறொரு தொடர்பில் இருக்க அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
‘டெவில்’ எனத் தலைப்பு வைத்துவிட்டு ஒருவரை மட்டும் ‘டெவில்’ எனக் காட்டாமல் முக்கிய கதாபாத்திரங்களான பூர்ணா, விதார்த், திரிகுண், சுபஸ்ரீ என எல்லாரையுமே ‘டெவில்’ ஆகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா. இவர்கள் மட்டுமல்ல மற்ற கதாபாத்திரங்களில் வரும் ஒரு சிலர் கூட மன ரீதியாக ‘டெவில்’ தான். அதனால், படத்திற்கு ‘டெவில்ஸ்’ என்று கூட பெயர் வைத்திருக்கலாம்.
உணர்வுபூர்மான ஒரு கதை, காதல், கள்ளக் காதல், வரம்பு மீறிய காதல் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் பூர்ணா மீது காதல் கொள்ளும் திரிகுண் அவரை விட வயது சிறியவர் போலத்தான் தெரிகிறார். முதலிரவன்றே தன்னைத் தவிக்க விட்டு, கள்ளக் காதலியுடன் போன கணவன் ஒரு பெண்ணுக்கு அமைந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும், நரகமாகத்தான் இருக்கும். அப்படி நரக வேதனையை அனுபவிக்கும் பூர்ணாவுக்கு ‘நான் இருக்கிறேன்’ என அரவணைக்கிறார் திரிகுண். இவர்கள் நெருக்கத்தை காதலா, காதலில்லையா என்ற தவிப்பிலேயே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
திருமணத்திற்கு முன்பே தன் உதவியாளர் சுபஸ்ரீயின் அழகில், மயங்கிக் கிடப்பவர் விதார்த். மனைவியைக் கூட தவிக்கவிட்டு சுபஸ்ரீ அழைப்பிற்கு ஓடிப் போனவர். 80களின் சினிமாவில்தான் இப்படியான கணவர்களைப் பார்த்த ஞாபகம். சுபஸ்ரீ கதாபாத்திரமும் அப்படியே, இறக்கமான ஆடை அணிந்து கிறங்க வைக்கிறார்.
விஷுவலாக படத்தை வேறு கோணத்தில் நகர்த்த வேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார். இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பின்னணி இசையில் அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது அவரது இசை. திடீர் திடீரென வரும் பாடல்கள் வேகத்தடைதான்.
நான்கு கதாபாத்திரங்களுக்குள் உணர்வுபூர்வமாக நகரும் கதையை அதே பாதையில் கொண்டு போய் முடிக்காமல், திடீரென கொலை, ஆன்மீகம் என முடித்து ‘என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களேப்பா’ என அதிர்ச்சியடைய வைத்துவிட்டார்கள்.
Tags: devil, adhithya, vidharth, poorna, mysskin