சிக்லெட்ஸ் 2 கே கிட்ஸ் - விமர்சனம்
03 Feb 2024
முத்து இயக்கத்தில் பாலமுரளி பாலு இயக்கத்தில் சாத்விக் வர்மாம, ஜாக் ராபின்சன், ரசீம், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்தர், மஞ்சீரா மற்றும் பலர் நடிப்பில் ‘ஏ’ சான்றிதழ் பெற்று வெளிவந்திருக்கும் படம்.
2000ம் வருடத்திற்குப் பிறகு பிறந்தவர்களை ‘2 கே கிட்ஸ்’ என அழைப்பார்கள். அவர்களில் 18 வயதை நெருங்கியுள்ள மூன்று இளம் பெண்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம்.
மிலிட்டரியில் வீர மரணம் அடைந்த மேஜரின் மகள் நயன் கரிஷ்மா. இவர் மீது அதிக பாசம் வைத்து வளர்ப்பவர் அம்மா சுரேகா வாணி. மார்வாடிப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீமன் மகள் அம்ரிதா ஹால்டர். பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அறந்தை ராஜகோபால் மகள் மஞ்சீரா. சிறு வயதிலிருந்தே ஒன்றாகப் படித்த நயன், அம்ரிதா, மஞ்சீரா வீட்டிற்குத் தெரியாமல் தங்களது ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்குச் சென்று ‘உல்லாசமாக’ இருக்கச் செல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களது வீட்டில் அது தெரிந்துவிட மகள்கள் கற்பைப் பறி கொடுப்பதற்கு முன்பு அவர்களைக் காப்பாற்றச் செல்கிறார்கள் சுரேகா, ஸ்ரீமன், ராஜகோபால். அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
டீன் ஏஜ் வயதில் உள்ள சில பெண்கள் என்ன தவறு செய்கிறார்கள், அந்த பெண்களின் தவறுகளை அதே வயதுடைய சில ஆண்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறார் இயக்குனர் முத்து. மகள்களைப் பெற்றவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றிய பயம் அதிகமாக இருக்கும். அப்படியான பெற்றோர்கள்தான் இந்தப் படத்திலும் காட்டப்பட்டுள்ளார்கள்.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா மூவரும் தங்களது பெற்றோர்கள் தங்கள் மீது வைத்துள்ள பாசத்தை மீறி ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கத் துடிக்கிறார்கள். இப்படியான கதாபாத்திரங்களைப் பார்க்கும் நிஜ வாழ்க்கைப் பெற்றோர்கள் நிறையவே பயந்து போவார்கள். அந்த அளவிற்கு இவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களது ஆண் நண்பர்களாக சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரசீம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
நயன் அம்மாவாக சுரேகா வாணி, அம்ரிதாவின் அப்பாவாக ஸ்ரீமன், மஞ்சீரா அப்பாவாக அறந்தை ராஜகோபால் இப்படியான மகள்களைப் பெற்ற பரிதாபத்துக்குரியவர்கள். இருந்தாலும் மகள்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பாசத்தில் துடிக்கிறார்கள்.
பாலமுரளி பாலு பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் அவரைப் பற்றிப் பேச வைக்கிறார்.
இளம் வயதில் தடுமாறி தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பவர்களைப் பற்றி இது போன்ற படங்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றன. சில பல ஆபாசமான காட்சிகள் இல்லாமல் இந்தப் படத்தை எடுத்திருந்தால் ஒரு படிப்பினை ஆன படமாக இந்தப் படம் அமைந்திருக்கும்.
Tags: chiclets