மறக்குமா நெஞ்சம் - விமர்சனம்

02 Feb 2024

ராக்கோ யோகேந்திரன் இயக்கத்தில், சச்சின் வாரியர் இசையமைப்பில், ரக்ஷன், மலினா, தீனா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

பள்ளி, கல்லூரிகளில் இருக்கும், நட்பு, காதல் என்பதைச் சொல்லி பல படங்கள் வந்துள்ளன. பள்ளி காலத்தில் வரும் காதல் என்பதை இந்தக் காலத்திலும் சொல்லும் படங்கள் வருவது ஆச்சரியமே. காதலைத் தவிர வேறு எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் அந்தப் பள்ளிப் பருவத்தில் நடக்கும். அதையெல்லாம் சொல்லாமல் காதலை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இந்தப் படத்திலும் அந்தக் காதல்தான் பிரதானமாக உள்ளது.

2008ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் ரக்ஷன். பள்ளி, கல்லூரி முடித்து தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வருபவர். அவருக்கு எப்போதுமே பள்ளி காலத்தைப் பற்றிய ஞாபகம். மீண்டும் பள்ளி நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார். இந்நிலையில் 2008ல் அந்தப் பள்ளியில் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் முறைகேடு நடந்துதான் தேர்வானார்கள் என்று நீதிமன்றம்  தீர்ப்பளிக்கிறது. இதனால், அந்த வருடம் படித்தவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து மூன்று மாதங்கள் படித்து தேர்வெழுதச் சொல்கிறது நீதிமன்றம். அதன்படியே ரக்ஷன் பள்ளிக்குச் செல்கிறார். பள்ளியில் படித்த காலத்தில் உடன்படித்த மலினா மீது காதல் கொண்டு அதைச் சொல்லாமல் இருந்தவர். இப்போது மீண்டும் சந்திக்கும் போதாவது அதை சொல்லத் துடிக்கிறார். சொல்ல முடியாத காதலை இப்போதாவது சொன்னாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

தலைப்பை மட்டும் கவிநயத்துடன் தேர்ந்தெடுத்த இயக்குனர் படம் முழுவதும்  கவிநயத்துடன் சொல்ல முயற்சித்திருக்கலாம். சில காட்சிகளில் மட்டுமே அதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு இப்படி வந்த படங்கள் எப்படி சொல்லப்பட்டன என்பதைப் பார்த்து இதில் இன்னும் கூடுதலாகச் சேர்த்திருககலாம்.

பள்ளி மாணவர் ஆக நடிக்க நிறையவே தடுமாறியிருக்கிறார் ரக்ஷன். டிவியில் அவருடைய கலகலப்பான பேச்சைப் பார்த்தே பழக்கம். இந்தப் படத்தில் பள்ளி மாணவர் என்பதால் அப்பாவித்தனமாகப் பேசுவதாக நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார். அந்த அப்பாவித்தனம் அப்படியும் வரவில்லை. கலகலப்பான கதாபாத்திரம்தான் அவருக்கு செட்டாகும். அப்படியே இப்படத்திலும் வைத்திருக்கலாமே ?.

ரக்ஷனின் மனம் கவர்ந்த மாணவியாக மலினா. நடிக்க அதிக வாய்ப்பில்லை என்றாலும் சிரித்த முகமாய் கவர்கிறார். ரக்ஷன் நண்பராக தீனா நிறைய பேசுகிறார். அவர்களது தோழியாக ஸ்வேதா ராஜகோபால் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி படத்திற்குப் பெரிய பலம். அந்தப் பள்ளியை பல கோணங்களில் படமாக்கியிருக்கிறார். இம்மாதிரியான படங்களுக்குப் பாடல்கள்தான் பெரும் பலம் சேர்க்க வேண்டும், அதை சச்சின் வாரியர் இன்னும் சேர்த்திருக்க வேண்டும்.

பள்ளி, நண்பர்கள், ஆசிரியர்கள், ரியூனியன் என நிறைய விஷயங்கள் கடந்து போனாலும் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

Tags: marakkuma nenjam

Share via: