தூக்குதுரை - விமர்சனம்
27 Jan 2024
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், யோகி பாபு, இனியா, மகேஷ், பாலசரவணன், சென்ட்ராயன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
காமெடி படம், பேய் படம் என பட வெளியீட்டிற்கு முன்பு வெளியான டிரைலரைப் பார்த்து இப்படம் என்ன மாதிரியான படம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், படத்தில் காமெடியும் இல்லையும், பயமும் இல்லை.
கிராமத்தில் உள்ள ராஜ வம்சத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் இனியா மகளைக் காதலிக்கிறார் யோகி பாபு. இவர் ஊர் ஊராகச் சென்று சினிமா காட்டுபவர். ஊர் திருவிழா நாளில் யோகிபாபுவும், இனியாவும் ஊரை விட்டு ஓட முயற்சிக்க, யோகிபாபுவைக் கொலை செய்கிறார் மாரிமுத்து. 20 வருடங்களுக்குப் பிறகு மாரிமுத்துவின் வீட்டில் உள்ள கிரீடத்தைக் கொள்ளையடிக்க மகேஷ், பாலசரவணன், சென்ட்ராயன் வருகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்தபின் மாரிமுத்து வீட்டில் இருந்த கிரீடம் போலி எனத் தெரிகிறது. உண்மையான கிரீடம் கிராமத்தில் உள்ள பாழும் கிணற்றில் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதே சமயம் யோகிபாபு பேயாக வந்து ஊர் மக்களை மிரட்டுகிறார். இதன் பின் அந்த கிரீடத்தை எடுத்தார்களா, யோகிபாபுவின் மிரட்டல் அடங்கியதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச நேரமும், இடைவேளைக்குப் பின் சில காட்சிகளிலும் மட்டுமே வருகிறார் யோகிபாபு. எந்தக் காட்சியில் நம்மை சிரிக்க வைத்தார் என்று யோசித்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
படத்தில் இனியா தான் கதாநாயகி. அவரும் ஆரம்பத்தில் சில காட்சிகள், பின்னர் சில காட்சிகள் வந்து போகிறார்.
மகேஷ், பாலசரவணன், சென்ட்ராயன் இவர்கள்தான் கூட்டணி அமைத்து கிராமத்திற்கு வந்து கிரீடத்தை கொள்ளையடிக்க முயலும் திருடர்கள். இவர்களுக்காவது சில காமெடி காட்சிகளை அமைத்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இருந்தும் காட்சிகளை வைக்கத் தவறிவிட்டார்கள்.
ராஜ வம்சத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளாக மாரிமுத்து, நமோ நாராயணன். அண்ணனுக்குக் கிடைக்கும் மரியாதையைப் பார்த்து தம்பி வெறுப்படைகிறார். அதனால், அவரும் அந்த கிரீடத்தைத் திருட நினைக்கிறார்.
கதையாக ஓகே தான் என்றாலும் முழு காமெடி பேய்ப் படமாகக் கொடுத்திருந்தார் ரசித்திருக்கலாம்.
Tags: thookkudurai, yogi babu