சிங்கப்பூர் சலூன் - விமர்சனம்
26 Jan 2024
கோகுல் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தனக்குப் பிடித்த வேலையில் பெரிய ஆளாக வர வேண்டும் என நினைக்கும் ஒரு இளைஞனின் கதை. ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக ஆசைப்படும் ஒரு நாயகனின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை. அந்த விதத்தில் இது புது கதைதான், ஆனால், கொஞ்சம் பழக்கப்பட்ட ஒரு சினிமா பார்முலாவில் வந்துள்ள படம்.
கிராமத்தில் இருக்கும் ஆர்ஜே பாலாஜிக்கு சிறு வயது முதலே ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசை. அப்பாவின் வற்புறுத்தலால் இஞ்சினியரிங் முடித்து பின் சென்னைக்கு வந்து ஒரு சலூன் கடையில் வேலைக்குச் சேர்ந்து தன் திறமையை வளர்த்துக் கொள்கிறார். திருமணம் முடிந்த பின் சொந்தமாக ஒரு சலூன் கடையைத் திறக்க ஆசைப்படுகிறார். ஒரு இடம் வாங்கி அதில் கடையைக் கட்டி திறப்பதற்குள் அவருக்குப் பல தடைகள் வருகிறது. அவற்றை மீறி தன் லட்சியமான ‘சிங்கப்பூர் சலூன்’ கடையைத் திறந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கலகலப்பான ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல், தொடர்ந்து நாயகனாக சில கலகப்பான படங்களைக் கொடுத்த ஆர்ஜே பாலாஜி இருவரும் இணையும் படம் என்பதால் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கலகலப்புக்கு ஏற்ற விதத்தில் கதை இருந்தாலும் கொஞ்சம் சீரியஸாகவும் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.
ஆர்ஜே பாலாஜியின் கதாபாத்திரம் சீரியஸான ஒன்றாக இருந்தாலும் அவ்வப்போது அவருடைய டைமிங் காமெடியை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். அவருக்கான காமெடி காட்சிகளை இன்னும் அதிகம் வைத்திருக்கலாம். இருந்தாலும் அந்தக் குறையை சத்யராஜ் மற்றும் ரோபோ சங்கர் தீர்த்து வைத்திருக்கிறார்கள். கஞ்சப் பிரபுவாக சத்யராஜ், இந்தக் காலத்திலும் இப்படி இருப்பார்களா என ஆச்சரியப்பட வைக்கிறார்.
பாலாஜியின் மனைவியாக மீனாட்சி சௌத்ரி. கணவனுக்குக் கை கொடுக்கும் மனைவியாக நடித்திருக்கிறார்.
பாலாஜியின் சிறு வயதிலிருந்தே நண்பராக கிஷன் தாஸ், பாலாஜியின் அப்பாவாக தலைவாசல் விஜய், பாலாஜியின் குருவாக லால், அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
விவேக் மெர்வின் பாடல்களை விட ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
இடைவேளைக்குப் பின் ஏழை மக்கள், அவர்களில் நடனத் திறமை உள்ள சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் என வேறு பாதையில் நகர்கிறது படம். அதோடு பறவைகள் பாதுகாப்பு என அக்கறையும் ஆலோசனையுமாகச் செல்கிறது படம்.
மனிதர்களுக்கு வாழ்விடம் எவ்வளவு முக்கியமோ அது போல பறவைகளுக்கான வாழ்விடமும் முக்கியம் என்பதை கடைசியில் அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர்.
Tags: singapore saloon, rj balaji, gokul