ப்ளூ ஸ்டார் - விமர்சனம்

26 Jan 2024

ஜெயகுமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், அசோக் செல்வன், சாந்தனு, பிருத்விராஜன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு திரைப்படத்தில் கதைக்களம் என்பது முக்கியமானது. சென்னை, மதுரை, கோவை, தென் மாவட்டங்கள் ஆகியவைதான் பெரும்பாலான படங்களின் கதைக்களமாக இருக்கும். இந்தப் படத்தில் சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை கதைக்களமாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒவ்வொரு பகுதிக்கென்றும் ஒரு வாழ்வியல் உள்ளது. சென்னை மாநகருக்கு மிக அருகில் இருந்தாலும் அந்த ‘பெரும்பச்சை’ கிராமம், அதன் ஊர் மக்கள், அதன் காலனி மக்கள், ரயில்வே ஸ்டேஷன், கிரிக்கெட் மைதானம் என ஒரு யதார்த்தப் பதிவை அழுத்தமாய் பதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயகுமார்.

பெரும்பச்சை கிராமத்தில் இரண்டு கிரிக்கெட் அணிகள் உண்டு. ஊரில் உள்ள மேல் சாதி இளைஞர்களின் கிரிக்கெட் அணியாக ஆல்பா பாய்ஸ், அதன் கேப்டன் சாந்தனு. ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்களின் கிரிக்கெட் அணியாக ப்ளூ ஸ்டார், அதன் கேப்டன் சாந்தனு. இரண்டு அணிகளுக்கும் இடையில் முன்பு நடந்த போட்டி தகராறில் முடிந்ததால் அதன்பின் மோதிக் கொள்ளாமலே இருக்கிறார்கள். மைதானத்தில் யார் முதலில் விளையாடுவது என்று வந்த சண்டை ஒன்றில் இரண்டு அணியும் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டு அதில் சாந்தனு அணி வெற்றி பெறுகிறது. அவர் வெளியூரிலிருந்து கிளப்பில் ஆடும் ஆட்களைக் கொண்டு வந்து ஆடி வெற்றி பெறுகிறார். இதன்பின் அந்த கிளப்பிற்குச் செல்லும் போது அந்த கிளப்பின் கோச் ஒருவரால் விரட்டியடிக்கப்படுகிறார் சாந்தனு. அந்த கிளப்பில் வேலையில் இருந்த பகவதி பெருமாள் அதைப் பார்த்து கோபமடைந்து சாந்தனுவையும், அசோக் செல்வனையும் ஒன்றிணைத்து அந்த கிளப் அணி நடத்தும் கிரிக்கெட் போட்டியில் விளையாட வைக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிரிக்கெட் போட்டிதான் படத்தின் மையக் கதையாக இருந்தாலும் அதில் சாதி மீறிய காதல், சாதி மீறிய நட்பு, ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி, மேல் சாதியினரின் ஆணவம் என சமூக ரீதியிலான படமாகவும் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு படத்திற்கு அதன் கதைக்களமும், கதாபாத்திரங்களும் இயல்பாக அமைந்துவிட்டால், அதில் நடிப்பவர்களின் பணியும் எளிதாக மாறிவிடும். அப்படியான கதாபாத்திரங்கள்தான் படத்தில் உள்ளது.

ப்ளூ ஸ்டார் அணி கேப்டன் ரஞ்சித் ஆக அசோக் செல்வன், ஆல்பா பாய்ஸ் அணி கேப்டன் ராஜேஷ் ஆக சாந்தனு இருவரும் அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள். 1998 கால கட்டத்தில் நடக்கும் கதை. அப்போதிருந்த ஹேர் ஸ்டைல், டிரஸ் ஸ்டைல், பேச்சு வழக்கு என இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை அள்ளிவிடுகிறார்கள். அசோக் செல்வன் தம்பியாக நடித்துள்ள பிருத்விராஜன் மூன்றாவது ஹீரோவாக முத்திரை பதிக்கிறார். இவர்கள் மூவருக்குமே அடுத்தடுத்து சிறப்பான வாய்ப்புகள் அமையலாம்.

அசோக் செல்வன் காதலியாக கீர்த்தி பாண்டியன். 90களின் இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போன பாவாடை தாவணி கதாநாயகியாக வலம் வருகிறார். இருவருக்குமான காதல் காட்சிகளில் அவ்வளவு அன்யோன்யம், அதனால்தான் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவி ஆகிவிட்டார்கள். ஆனந்தி கதாபாத்திரத்திற்குள் தன்னை அப்படியே ஐக்கியமாக்கிக் கொண்டுள்ளார்.

மேல்சாதியினரின் கோபத்திற்கு ஆளாகி தனது வளர்ச்சியைப் பறி கொடுத்தவராக பகவதி பெருமாள். சாதி வித்தியாசம் பார்க்காமல் ஊர் இளைஞர்களை ஒன்று சேர்க்கும் சமூக சிந்தனையாளராய் நடித்திருக்கிறார்.

பாடல்களிலும், பின்னணி இசையிலும் மேலும் ஸ்டார் அந்தஸ்தை சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. தமிழ் அழகனின் ஒளிப்பதிவு ஊர் கிரிக்கெட் மைதானத்தையும், கிளப் கிரிக்கெட் மைதானத்தையும் பலப்பல கோணங்களில் பதிய வைத்துள்ளது.

இடைவேளைக்குப் பின்பு வரும் அதிகமான கிரிக்கெட் போட்டி காட்சிகள் தான் படத்தின் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது. வாழ்வியல் படங்களின் வரிசையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு படம்.

Tags: blue star, ashok selvan, shanthanu, keerthi pandian, jayakumar, govind vasantha

Share via: