ஹனு மான் - விமர்சனம்

15 Jan 2024

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.

பக்தியையும், பேன்டஸியையும் கலந்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தைக் கொடுத்து பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த். ராமாயணக் காலத்து சூப்பர் ஹீரோ ஹனுமான், அவரது சக்தியால் படத்தின் கதாநாயகனுக்கும் சக்தி கிடைக்க அந்த சக்தியை வைத்து நாயகன் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

அஞ்சனாத்ரி என்ற ஊரில் அக்கா வரலட்சுமியுடன் இருப்பவர் தேஜா சஜ்ஜா. ஊர் மக்களிடம் இருந்து எதையாவது திருடுவதுதான் அவரது பொழுதுபோக்கு. ஊர் மக்களை காவலன் என்ற பெயரில் வரி வசூலித்து கொடுமைப்படுத்துகிறார் ஒருவர். அதை எதிர்த்து கேள்வி கேட்கும் நாயகி அம்ரிதாவுக்கு சிக்கல் வருகிறது. தனக்கு திடீரென கிடைக்கும் சக்தியில் அந்தக் காவலனை எதிர்த்து வெற்றி காண்கிறார் தேஜா. அதற்கடுத்து தேஜாவிடம் இருக்கும் சக்தி எதனால் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வருகிறார் கெட்ட எண்ணம் கொண்ட ஆராய்ச்சியாளர் வினய். தேஜாவிடம் இருக்கும் சக்தி கல் ஒன்றை அடைய நினைக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தெலுங்கில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ‘ஜாம்பி ரெட்டி, இஷ்க், அத்புதம்’ ஆகிய தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்த தேஜா சஜ்ஜா இந்தப் படம் மூலம் இளம் முன்னணி நடிகர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவார். ஒரு இளம் கதாநாயகன் என்னவெல்லாம் செய்வாரோ அனைத்தையும் செய்கிறார். சக்தி கல் கிடைத்தவுடன் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறார். அதனால், அவரது ஆக்ஷனையும் நம்ப முடிகிறது.

டாக்டருக்குப் படித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் அம்ரிதா ஐயர், ஊர் மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஊர் காவலன் ராஜ் தீபக் ஷெட்டியை எதிர்த்து நிற்கிறார். தேஜா தன்னைக் காதலிப்பது பற்றிய உண்மை தெரிந்ததும் காதலில் விழுகிறார். சிறிய படங்களில் நடித்து வந்த அம்ரிதாவுக்கு இந்தப் படம் திருப்பத்தைத் தரும்.

பாசமான அக்காவாக வரலட்சுமி சரத்குமார், சமீபத்திய கார்ப்பரேட் வில்லன் கதாபாத்திரங்களை தனதாக்கிக் கொள்ளும் வினய், விபீஷணன் ஆக வரும் சமுத்திரக்கனி அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். கெட்டப் சீனுவின் நகைச்சுவை தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும்.

கௌரா ஹரி பின்னணி இசை, ஷிவேந்திரா ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஹனுமான், சக்திக் கல், பிரம்மாண்டம், சூப்பர் ஹீரோ என்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். சக்தி கிடைத்தால் நாயகன் என்னவெல்லலாம் செய்ய முடியும் என காட்டுவதுடன் சூப்பர் ஹீரோயிசத்தை முடித்துக் கொள்கிறார். இடைவேளை வரை ஒரு வில்லன், பின்னர் வேறொரு வில்லன் என திரைக்கதை எந்த அழுத்தமும் இல்லாமல் நகர்கிறது. 90களில் நடக்கும் கதை என்பதால் அந்தக் கால சினிமா போலவே இருக்கட்டும் என நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

Tags: hanu man, teja sajja

Share via: