அயலான் - விமர்சனம்
14 Jan 2024
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
வேற்று கிரகவாசி என்று சொன்னால் எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியாது. ஆனால், ஏலியன் என்று சொன்னால் இன்றைய தலைமுறையினர் எளிதில் தெரிந்து கொள்வார்கள். அந்த ஏலியனை வைத்து தமிழ் சினிமாவில் ஓரிரு படங்கள் மட்டுமே வந்துள்ளன. ஹாலிவுட்டில் தடுக்கி விழுந்தால் இப்படியான படங்கள் வரும்.
தமிழிலும் ஹாலிவுட் தரத்திற்கு விஎப்எக்ஸ் செய்து இந்தப் படத்தைக் கொடுத்ததற்கு முதலில் பாராட்டுக்கள். சில நூறு கோடி பட்ஜெட் இருந்தால் இன்னும் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும் என இயக்குனர் ரவிக்குமார் நிரூபித்திருக்கிறார்.
‘ய் டூ வூ ய்’ என்ற கிரகத்திலிருந்து பூமிக்கு வருகிறது ஒரு ஏலியன். இங்கு பூமியில் அந்த கிரகத்திலிருந்து விழுந்த ‘ஸ்பார்க்’ என்ற கல்லின் மூலம் பூமியில் அதிக ஆழத்தில் துளை போட்டு ‘நோவா கேஸ்’ என்ற ஒன்றை எடுக்க வில்லன் ஷரத் கேல்கர் திட்டமிடுகிறார். அதனால், ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைத் தடுக்கத்தான் அந்த ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது. ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கும் சிவகார்த்திகேயன், ஏலியன் சந்திப்பு நடக்கிறது. விவசாயம், உயிரினம் மீது அதிக பற்றுள்ள சிவகார்த்திகேயனை வைத்து ‘நோவா கேஸ்’ திட்டத்தைத் தடுக்க நினைக்கிறது ஏலியன். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என விவசாயம் செய்பவர் சிவகார்த்திகேயன். பூச்சிகள் அவரது வயலை அழித்தால் கூட அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். இப்படியிருந்தார் சரி வராது என அவரது அம்மா பானுப்ரியா சண்டை போட்டு மகனை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். வந்த இடத்திலும் ஏலியன் மூலமாக இந்த பூமியையும், மனிதர்களையும் காப்பாற்றும் வேலைதான் அவருக்குக் கிடைக்கிறது. கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங். இருவருக்குமான காதல் காட்சிகளும் குறைவு, பாடல்களும் குறைவு. அறிவியல் சார்ந்த கதையில் அறிவியல் கண்காட்சிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு அறிவியல் பற்றி சொல்பவராக ரகுல்.
இடைவேளை வரையிலான கலகலப்புக்கு கருணாகரன், யோகி பாபு கூட்டணி முடிந்தவரையில் உதவி செய்திருக்கிறது. அவர்கள் நடத்தும் ஏஜன்சியில் வேலை செய்ய வந்து நண்பராகிறார் சிவகார்த்திகேயன்.
கார்ப்பரேட் வில்லனாக ஷரத் கேல்கர். வழக்கமான டெம்ப்ளேட் கதாபாத்திரம்தான்.
ஏஆர் ரகுமான் இசை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது ஏமாற்றம். நீரவ் ஷா ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு சரியான பங்களிப்பைச் செய்துள்ளது.
விஎப்எக்ஸ் காட்சிகளைச் செய்த நிறுவனம், குழுவினர் ஆகியோருக்கு தனி பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு தரமான காட்சிகளைக் கொடுக்க முடியும் என தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
திட்டமிட்டபடி சில வருடங்களுக்கு முன்பே படம் வந்திருந்தால் பல படங்களுக்கு முன்னுதாரணமாய் அமைந்திருக்கும். தாமதமாக வந்தாலும் அந்தக் குறை தெரியாமல் இருக்கிறது.
படத்தின் ‘டேக் ஆப்’ மட்டும் கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏலியன் வந்த பிறகுதான் ‘விர்’ எனப் பறக்கிறது திரைக்கதை.
Tags: ayalaan, sivakarthikeyan, ar rahman