கேப்டன் மில்லர் - விமர்சனம்
14 Jan 2024
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதையாக இப்படத்தின் கதை சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்களின் அடக்கு முறை, அதிகாரம், அவர்கள் சொல்வதைக் கேட்கும் அப்பகுதி அரசர். ஆங்கிலேயருக்கும், அரசருக்கும் இடையில் ஒடுக்கப்பட்டு வாழும் மக்கள். ஆங்கிலேயப் படையில் சேர்ந்தால் அடிமையாக வாழ வேண்டாம் என சேர்கிறார் தனுஷ். அங்கு சக மக்களையே கொல்லச் சொல்கிறார் ஆங்கிலேயே அதிகாரி. அதனால், அவரைக் கொன்றுவிட்டு கொள்ளைக் கூட்டத்திடம் சேர்கிறார். ஊர் கோவிலிலிருந்த பழமை வாய்ந்த கோரனார் சாமி சிலையை ஆங்கிலேயர்கள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அதை மீட்டுத் தரவேண்டும் என தனுஷிடம் கேட்கிறார் அரசர். தனுஷும் சிலையை மீட்கிறார், ஆனால், அதை அரசரிடம் தராமல் அவர் தூக்கிச் சென்றுவிடுகிறார். சிலையைத் திருடிய தனுஷ் மீது கோபமடையும் ஆங்கிலேயர்கள் அவரது ஊர் மக்களைக் கொல்ல படையுடன் வருகிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
600 வருடங்களாக கோயிலுக்குள் நுழையாமல், தங்களின் கடவுளான கோரனார் சிலையை மீட்டெடுத்து வழிபட முடியாமல் ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வரும் மக்களைப் பற்றிய கதைதான் இப்படத்தின் மையக் கதை. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஆங்கிலேயர்கள் நடத்திய விதம், உயர்சாதி அரசர்கள் நடத்திய விதம் என சில பல காட்சிகள், வசனங்கள் பரபரப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ளது. இடையில் சில காதல்களும் வந்து போகிறது. ஒரே படத்தில் சிறிது சிறிதாக சில கதைகளை பொருத்தமாக நுழைத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் உருவாக்கம், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, ஒவ்வொருவரின் நடிப்பு என இந்தப் படம் இப்போது பேசப்படுவதைக் காட்டிலும் எதிர்காலத்தில் நிறையவே பேசப்படும் என்பது உறுதி. வேறு ஒரு தளத்திற்கு தமிழ் சினிமாவைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
‘ஆடுகளம், அசுரன்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்திற்காகவும் தனுஷின் நடிப்பு அதிகம் பேசப்படும். கிராமத்து இளைஞன், ஆங்கிலேயப் படையில் சிப்பாய், கொள்ளைக் கூட்டத்தில் ஒரு முக்கிய திருடன், ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டை போடுவதில் வீரன் என சில பல தோற்றங்களில் வேறொரு தனுஷைப் படம் முழுவதும் பார்க்க முடிகிறது. படத்திற்குப் படம் நடிப்பில் வேறு ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் தனுஷ்.
பிரியங்கா மோகன் சில காட்சிகளில் வந்தாலும், அரச பரம்பரையில் வந்தவர், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடுவதிலும், மக்களுக்காக சேவை செய்வதிலுமாக மனதில் இடம் பிடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கொள்ளைக் கூட்டத்தில் இருக்கும் ஒரு தைரியமான பெண்ணாக நிவேதிதா சதீஷ்.
ஆங்கிலேயர்களிடம் கை கட்டி நிற்கும் அரசராக ஜெயப்பிரகாஷ், அவரது மகனாக ஜான் கொக்கேன், ஊர் மக்களிடம் மட்டும் தங்களை அதிகாரமிக்கவர்களாக காட்டிக் கொள்பவர்கள்.
தனுஷின் அண்ணனாக சிவராஜ்குமார். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவதால், திடீரென வருகிறார், திடீரென போய்விடுகிறார். அவர் வரும் ஒரு சில காட்சிகளில் கூட தியேட்டர்களில் அப்படி ஒரு கைத்தட்டல். ஆங்கிலேயப் படையில் இருக்கும் போது தனுஷின் நண்பனாக சந்தீப் கிஷன். தனுஷின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக குமரவேல். இவர்கள் தவிர சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்குமே இது ஒரு அடையாளத்தைக் கொடக்கும் படமாக இருக்கும்.
ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசை வேற லெவல். இந்தப் படத்தின் தரத்தை உயர்த்தியதற்கு அவருடன் சேர்ந்து ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி, எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன், கலை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் உழைத்திருக்கிறார்கள்.
படத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனச் சிதறல் இல்லாமல் பார்த்தால்தான் படத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் புரியும். மேலோட்டமாக ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு படமல்ல இப்படம். வழக்கமான பார்முலாவில் இல்லாத திரைக்கதை மட்டும் சிலருக்குப் புரியாமல் போகலாம். தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் அருண் மாதேஸ்வரன்.
Tags: captain miller, dhanush, arun madheswaran, gv prakashkumar, priyanka mohan, shivarajkumar