கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் - துருவா

Release Date:29 Mar 2016
ஒரு காலத்தில் சினிமா யாரும் சுலபத்தில் நுழைய முடியாத கோட்டையாக இருந்தது. இன்று விரும்பியவர்கள் உள்ளே வரும் ஆயிரம் வாசல் மண்டபமாகி விட்டது. இன்று சினிமாவில் ஆர்வக் கோளாறு வரவுகளும் உண்டு. ஆழமான ஈடுபாடு கொண்டவர்களும் வருகிறார்கள். ஆனால் சினிமாவை ஆழமாக நேசிப்பவர்களையும் முழு ஈடுபாடு காட்டுபவர்களையும் திறமை சாலிகளையும் மட்டுமே சினிமா தனக்குள் ஈர்த்துத் தக்க வைத்துக் கொள்ளும்.அப்படி சினிமாவை முழுமையாக நேசிக்கும் ஒரு நடிகர் தான் துருவா. வசதியான பின்புலம், வெளிநாட்டுப் படிப்பு, கை நிறைய சம்பளம், ஜாலியான வாழ்க்கை என அமைந்து இருந்த எல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாக புறம் தள்ளிவிட்டு சினிமாவை நோக்கி வந்திருப்பவர் துருவா. இவர் அறிமுகமான 'திலகர்' படம் இவருக்கு, நடிக்கத் தெரிந்த நம்பிக்கை முகம் என்கிற சான்றிதழை பெற்றுக் கொடுத்துள்ளது. இப்போது மூன்று புதிய படங்களில் நடித்து வருகிறார் துருவா. தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க ஆசைப்படும் அவருடன் நாம் சந்தித்த போது... முதல்பட அனுபவம் எப்படி இருந்தது ? thilagar duruvaஎன் முதல் படம் 'திலகர்'. அந்தப் பட அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. ஒரு பீரியட் பிலிம் போன்ற கதை, திருநெல்வேலி வட்டார மொழி, நடிக்க நல்ல வாய்ப்பு என்று இருந்தது. அனுபவம் வாய்ந்த பெரிய நடிகர்தான் செய்ய முடியும் என்கிற பாத்திரத்தில் நான் நடித்தேன். படத்தில் நடிக்கும் முன் அவ்வளவு பயிற்சிகள், முன் தயாரிப்புகள், ஒத்திகைகள் என்று பாடுபட்டோம் அதற்கான பலன் கிடைத்தது. நான் வெளிநாட்டில் ஆர்க்கிடெக்கில் பட்டப்படிப்பு படித்தவன். அமெரிக்காவில் வேலையும் பார்த்தேன். எனக்கு சினிமா ஆர்வம் இருந்ததால் சினிமா சம்பந்தமாக ஒரு கோர்ஸும் அங்கேயே படித்தேன். அதில் 'பிலிம் மேக்கிங்' என்கிற வகையில் சினிமா சார்ந்த, அடிப்படையான எல்லா விஷயங்களும் இருக்கும். அதன் பிறகுதான் சென்னைக்குத் திரும்பினேன். திலகர் படப்பிடிப்பின் போது நான் தினமும் அங்கே போவேன். மற்ற எல்லா நடிகர்கள் நடிக்கும்போதும் போய் உற்று நோக்குவேன். அது நல்ல அனுபவம். 'திலகர்' படம் எனக்கு ஒரு படிப்பு போலவே இருந்தது. அமெரிக்காவில் படித்தது இங்கு உதவியதா ? இங்கு வந்து பார்த்தபோதுதான் படித்தது வேறு, நடப்பது வேறாக இருப்பது புரிந்தது. காரணம் இங்கு பலவும் வழிவழியாக பின்பற்றும் நடைமுறையாக இருந்தது. அங்கே படித்தது இப்போது ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் நடைமுறைகள், செயல் முறைகள் என்று இருக்கும். நம் ஊரிலும் அப்படிப்பட்ட மாற்றங்கள் எதிர்காலத்தில் வரும் . இருந்தாலும் சினிமா பற்றிய அறிமுகப் புரிதல் அந்த படிப்பின் மூலம் ஏற்பட்டது. அது என்றைக்கும் உதவும். கிஷோருடன் இணைந்து நடித்த அனுபவம்? thilagar reviewஎல்லாருக்கும் தெரியும் கிஷோர் கன்னா பின்னா வென்று கண்ட கண்ட படங்களில் நடிப்பவர் அல்ல. கதையில் பாத்திரத்தில் தரம், தகுதி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டார். அவர் 'தூங்காவனம்' 'விசாரணை' போன்று தகுதியான படங்களில் மட்டும் நடிக்கும் ரகம். 'திலகர்' கதை அவருக்குப் பிடித்ததால்தான் நடித்தார். ‘திலகர்’ கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டார். கேட்டபிறகு ஒரு கேள்வியை ஆர்வமாகக் கேட்டாராம். திலகராக நடிக்கப் போவது யார்? ஒரு புதுமுக நடிகர் என்ற போது என்னைவிட அவருக்கு நல்ல பெயர் வரும் என்றாராம். அது போலவே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதுமட்டுமல்ல கிஷோர் சார், நான் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்து பலரும் சொன்னது நீங்க நிஜமான அண்ணன் தம்பி போலவே இருக்கிறீர்கள் என்பதுதான் . அந்த அளவுக்கு எங்கள் பாத்திரங்கள் இருந்தன. அப்படி உருவாக்கி இருந்தார் இயக்குநர் பெருமாள் பிள்ளை. நான் புதுமுகம் என்று பார்க்காமல் கிஷோர் சார் நட்புடன் சம உரிமை கொடுத்துப் பழகினார். என்னுடன் நட்புடன் பழகினார். எவ்வளவோ ஒத்திகை பார்த்து முன்னேற்றபாட்டுடன் நடிக்க வந்தாலும் மற்ற நடிகர்கள் மத்தியில்,வேடிக்கை பார்ப்பவர்கள் மத்தியில் நடிப்பது சிரமமாக உணர்ந்தேன், பதற்றமாக மிரட்சியாக இருந்தது. இதை புரிந்து கொண்டவர். இப்படி பதட்டப்பட்டால் நடிப்பு வராது. உன் பதற்றத்தை அகற்று. பயமில்லாமல் இயல்பாக்கிக் கொள் அப்போதுதான் நடிக்க முடியும் என்றார். அதற்கு வழிகளையும் சொன்னார். பிறகுதான் ஆசுவாசப்படுத்தி இயல்பு நிலைக்கு வந்தேன். இப்படி அவர் உடன் இருந்தே வழிகாட்டினார். அவர் நடிக்கும் போது எப்படி யதார்த்தமாக பாத்திரத்துக்குள் நுழைகிறார் என்று அருகில் இருந்து பார்த்து கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்பப்பா கிஷோர் சார் ஒரு அருமையான நடிகர். படத்தில் நடித்த அனுமோலும் சிறந்த நடிகைதான். கண்கள் மூலமாகக் கூட கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் நல்ல நடிகை. அவரைப் பார்த்தும் நடிப்பைத் தெரிந்து கொண்டேன் . 'திலகர்' படம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததா? duruvaஎதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததற்கு வன்முறை என்று 'ஏ' சான்றிதழ் கிடைத்தது ஒரு காரணம். சென்னை போன்ற நகர்ப் பகுதியில்தான் சரியாகப் போகவில்லை. தென் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியது. தங்கள் பகுதியில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதை என்பதால் ஈடுபாட்டுடன் அங்கே ரசித்தார்கள். பல விதமான அனுபவங்களைக் கொடுத்த வகையில் 'திலகர்' படம் எனக்கு பெரிய லாபமே. எங்கே போனாலும் என்னைத் தெரிகிறது. படம் பெயரைச் சொன்னாலும் தெரிகிறது. முதல் படத்திலேயே நாலுவித தோற்றங்கள், நடிப்பு வாய்ப்பு என பல அனுபவங்கள். எனக்கு நல்ல அங்கீகாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கிறது. சினிமா பற்றிய உங்கள் அபிப்ராயம் நடிக்க வரும் முன் இருந்தது, வந்தபின் மாறி இருக்கிறதா? சினிமா எனக்குப் பிடித்தது. பிடித்துதான் இங்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் இந்த ஆசை எனக்குள் அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது எல்லார் மாதிரியும் சினிமா பற்றி நானும் சுலபமாக நினைத்தது உண்டு. உள்ளே வந்து பார்க்கும்போது இது எவ்வளவு பெரிய உலகம், எவ்வளவு பேர் சிரமப்படுகிறார்கள். படம் பார்த்துவிட்டு சுலபமாக கமெண்ட் அடித்து விடுகிறோம். ஒரு ஷாட்டுக்கு எவ்வளவு பேர் சிரமப்படுகிறார்கள். ஒரு கோணத்துக்குக் கூட எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று உணர முடிந்தது. என் முதல் படத்தில் நடித்த போது மிகவும் கஷ்டப்பட்டேன். பிடித்து செய்ததால் அது வலியாகத் தெரியவில்லை. நடித்ததை திரையில் பார்த்தபோது முதல் சந்தோஷம். எடிட் செய்து பார்த்தபோது பரவசமாக இருந்தது. இதற்காக எவ்வளவு கஷ்டமும் படலாம், தகும் என்று அப்போது உணர்ந்து கொண்டேன். எப்படிப்பட்ட நடிகராக வர ஆசை? நாலு பாட்டு நாலு ஃபைட் என்று வருகிற கதைகளில் நடிக்க விருப்பமில்லை. மிகையான ஹீரோயிஸம் ஃபேண்டஸி யான கதைகளிலும் நடிக்க விருப்பமில்லை. நல்ல கதை மாறுபட்ட கதாபாத்திரம் நடிக்க வாய்ப்புள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்க மட்டுமே விரும்புகிறேன். இப்போது நடித்து வரும் படங்கள்? actor duruva'திலகருக்குப் பின் அடுத்து வரவிருக்கும் படம் 'தேவதாஸ் பிரதர்ஸ்'. இதை ஜானகிராமன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் '3', 'நய்யாண்டி' ,'வேலையில்லா பட்டதாரி' படங்களில் பணியாற்றியவர். இது காதல் தோல்வியை மையப்படுத்தியுள்ள கதை. கலகலப்பும் உண்டு. நான்குவிதமான பொருளாதார அடுக்குகளில் காதல் எப்படி எதிர்கொள்ளப் படுகிறது, அணுகப்படுகிறது, பார்க்கப்படுகிறது என்பதுதான் கதை. நகரம், நகர்ப்புறம் ஊர், வெளியூர் என்று கதை நிகழ்கிறது. நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு ஜோடி சஞ்சிதா ஷெட்டி. படத்தில் சமூகத்துக்குத் தேவையான நல்ல விஷயமும் சொல்லப்பட்டு இருக்கிறது. படத்தின் வேலைகள் முடிந்தவிட்டன. வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அடுத்து நான் நடித்து முடித்திருக்கும் படம் 'மாலைநேரம்'. இதை இயக்கியிருப்பவர் துவாரக் ராஜா. இது குறும்படமாக பெரிய வெற்றி பெற்றது. இது காதல்கதைதான், கதை பிடித்துதான் இதில் நடித்தேன். எனக்கு ஜோடி வெண்பா. இவர் குழந்தை நட்சத்திரமாக 'கற்றதுதமிழ், சத்யம், கஜினி' போன்ற பல படங்களில் நடித்தவர். என் அம்மாவாக கல்பனா நடித்திருக்கிறார். சார்லி சாரும் நடித்துள்ளார். 28 நாளில் இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சென்னையில் நடக்கும் கதை. இதில் நான் விடாது புகைப்பிடிக்கும் செயின் ஸ்மோக்கராக நடித்திருக்கிறேன். புகைப்பதன் விளைவையும் சொல்லியிருக்கிறோம். எனக்கு புகை பழக்கமெல்லாம் கிடையாது. படத்துக்காகவே அப்படி நடித்தேன். duruva actorஒளிப்பதிவு - பாலாஜி, இசை - தரண் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்து 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' என்கிற த்ரில்லர் படம் உருவாகி வருது. இதன் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. இயக்குபவர் ராகேஷ். 'தம்பிக்கோட்டை' ,'தகடு தகடு' போன்ற படங்களில் பணியாற்றியவர். ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா. இணைந்து தயாரித்துள்ளது இவரின் பி ஜி மீடியா நிறுவனம். இசை - தரண். இம்மூன்று படங்களையும் எக்சட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. V. மதியழகன், R. ரம்யா தயாரிக்கிறார்கள். குடும்பத்தினர் உங்கள் திரை ஈடுபாட்டை ஆதரிக்கிறார்களா? அவர்கள் ஆதரவு இல்லாமல் என்னால் சினிமாவில் ஈடுபடவோ இயங்கவோ முடியாது. ஆரம்பத்தில் தயங்கியவர்கள் திலகருக்குப் பின் முழு மனதோடு ஊக்கம் தருகிறார்கள். மறக்க முடியாத பாராட்டு ? 'திலகர்' படம் பார்த்து விட்டு கலைப்புலி எஸ் தாணு சார் பாராட்டியதும் அவரே படத்தை வாங்கி வெளியிட்டதும் எனக்குப் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அவர் ரஜினி சாருக்கே சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர். அவர் வாயால் பாராட்டு பெற்றது விருது பெற்ற சந்தோஷம் தந்தது. அதுவே மறக்க முடியாத பாராட்டு. எதிர்காலத் திட்டம்? நல்ல நடிகன் என்று பெயரெடுக்க வேண்டும். விதவிதமான மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டும். பெரிய பெரிய அனுபவசாலிகளுடன் இணைந்து நடிக்க வேண்டும். பெரிய இயக்குநர்களிடம் பணிபுரிய வேண்டும். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படிக் காலம் முழுக்க ஒரு மாணவனாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்,'' என அடக்கத்துடன் கூறுகிறார் துருவா.

Share via:

Movies Released On March 15