மெர்ரி கிறிஸ்துமஸ் - விமர்சனம்

14 Jan 2024

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

 

ஹிந்தி, தமிழ் மொழிகளில் ஒரே சமயத்தில் தயாரான படம். ஹிந்தியில் விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குனரான ஸ்ரீராம் ராகவன், ஒரு காலத்தில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியான காத்ரினா கைப் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்கள்.

பிரபல பிரெஞ்சு எழுத்தாளரான பிரட்ரிக் டார்ட் எழுதிய ‘பேர்ட் இன் எ கேஜ் (Bird In A Cage)’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். பம்பாய் மாநகரத்தில் 80களில் நடக்கும் ஒரு கதையாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு தனது வீட்டிற்கு வருகிறார் விஜய் சேதுபதி. துபாயில் இருந்து திரும்பி வந்ததாக சொல்லிக் கொள்கிறார். வெளியில் செல்லும் போது ரெஸ்டாரன்ட் ஒன்றில் முன்பின் தெரியாத காத்ரினா கைப்பை சந்திக்கிறார். காத்ரினாவுக்குத் துணையாக அவரது வீட்டிற்கும் செல்கிறார். காத்ரினா தன் மகளைத் தூங்க வைத்துவிட்டு, விஜய் சேதுபதியுடன் மீண்டும் வெளியில் வந்து சுற்றி விட்டு வீட்டிற்குச் செல்கிறார். வீட்டினுள் காத்ரினாவின் கணவர் இறந்து கிடக்கிறார். தன்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியாது என விஜய் சேதுபதி அவரது வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். காத்ரினாவின் கணவர் எப்படி இறந்தார், விஜய் சேதுபதி யார், அவர் பின்னணி என்னவென்பது இடைவேளைக்குப் பிறகான கதை.

ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் முன்பு வரை படம் மெதுவாக நகர்கிறது. விஜய் சேதுபதி, காத்ரினா இருவரும் யதேச்சையாக சந்தித்துக் கொள்வது, அப்படியே பழக ஆரம்பிப்பது ஒருவர் வீட்டிற்கு மற்றவர் செல்வது, காத்ரினாவுடன் அதிக நேரம் விஜய் சேதுபதி இருக்க நினைப்பது என காதலா, கள்ளக் காதலா என புரிந்து கொள்ள முடியாத அளவு இருவரும் பழகுகிறார்கள். இடைவேளைக்குப் பின்பும், கிளைமாக்சிலும் திருப்பம் மேல் திருப்பம், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது போன்ற கதை, திரைக்கதை புதியது. அந்தக் கால பாலசந்தர் படங்களைப் பார்ப்பது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

விஜய் சேதுபதி கடைசியாக நடித்த சில தமிழ்ப் படங்களில் அவருடைய நடிப்புத் திறமையை சரியாகப் பார்க்க முடியாத கதாபாத்திரங்களாகவே இருந்தது. வில்லனாக நடித்த ‘மாஸ்டர், விக்ரம்’ ஆகிய படங்கள்தான் ஞாபகத்திற்கு வந்து நின்றது. அந்தக் குறையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் தீர்த்து வைத்திருக்கிறது. தான் யார் என்ற உண்மையை மறைத்து, காத்ரினா மீது கொஞ்சம் காதலாகி, பின் கொலைப் பழியில் சிக்கக் கூடாதென தவிப்பது என நம்மை ரசிக்க வைக்கிறார்.

காத்ரினா கைப் தமிழ் சினிமாவில் எல்லாம் நடிக்க மாட்டாரா என ஒரு காலத்தில் ரசிகர்கள் ஏங்கினார்கள். அந்த ஏக்கத்தை இத்தனை வருடம் கழித்து நிறைவேற்றியிருக்கிறார் காத்ரினா. தன்னை சரியாக நடத்தாத கணவன் மீது கோபப்படும் ஒரு கதாபாத்திரம். காத்ரினா தமிழிலும் நடித்துவிட்டார் என்று சொல்லிக் கொள்ளலாம்.

கிளைமாக்ஸ் முன்பாக வரும் ராதிகா, சண்முகராஜன் கதாபாத்திரங்களும் அவர்களது நடிப்பும் நாடகத்தனமாக அமைந்துள்ளது. 

டேனியல் பி ஜார்ஜ் பின்னணி இசை, மது நீலகண்டன் ஒளிப்பதிவு தரம்.

மெதுவாக நகர்வது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தெரிகிறது. 

Tags: merry christmas

Share via: