மிஷன் சாப்டர் 1 - விமர்சனம்
13 Jan 2024
விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
காதல், குடும்பப் பாங்கான உணர்வு பூர்வமான படங்களை அதிகம் கொடுக்கும் விஜய் அவ்வப்போது ஆக்ஷன் பக்கமும் திரும்புவார். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
மகளுக்கு ஆபரேஷன் செய்வதற்காக லண்டன் செல்கிறார் அருண் விஜய். அங்கு நடக்கும் ஒரு சண்டையில் கைதாகி சிறைக்குச் செல்கிறார். அந்த சிறையில் இருந்து சில தீவிரவாதிகளை தப்பிக்க வைக்க அக்குழுவின் தலைவரான பரத் பொபன்னா முயற்சிக்கிறார். வெளியிலிருந்து சிறையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். சிறைக்குள் கலவரம் வெடிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தி, அந்த தீவிரவாதிகள் தப்பிக்கச் செல்வதையும் தடுக்க முயல்கிறார் அருண் விஜய். கைதியாகச் சென்றவர் அப்படிச் செய்வதற்கான காரணம் என்ன அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தின் ஆரம்பத்தில் அப்பா அருண் விஜய், மகள் பேபி இயல் இடையிலான பாசக் காட்சிகள் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகிறது. லண்டன் சென்ற பின் தான் படம் எமோஷனிலிருந்து ஆக்ஷனுக்கு மாறுகிறது. அருண் விஜய்க்கு இது ஒரு ‘டெய்லர் மேட்’ கதாபாத்திரம். அப்படி பிட் ஆக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் துடிப்பாய் நடித்துள்ளார்.
லண்டன் சிறையின் தலைமை அதிகாரியாக எமி ஜாக்சன். தீவிரவாதிகள் சிறையை கட்டுப்பாட்டிற்குள் எடுத்த பின்பு, அருண் விஜய்க்கு என்னவெல்லாம் உதவி செய்ய முடியுமோ அதை அனைத்தையும் செய்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் கூட நடித்திருக்கிறார்.
அருண் விஜய்யின் சக சிறைவாசியாக சிங் கதாபாத்திரத்தில் அபிஹாசன் ஆச்சரியப்பட வைக்கிறார். நிமிஷா சஜயன் கதாபாத்திரம் குறைவாக வந்தாலும் நிறைவு. வில்லன் பரத் பொபன்னா, நாயகன் அருண் விஜய்யுடன் நேரடியாக மோதாமல் வில்லத்தனம் செய்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் பின்னணி இசை, சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு, சரவண வசந்த் கலை இயக்கம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் இப்படித்தான் நகரும் என கணிக்க முடிகிறது. சில காட்சிகள் வழக்கமான காட்சிகளாக இருக்கிறது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் இரண்டரை மணி நேரமும் பரபரப்பாகவே நகர்கிறது.
Tags: mission chapter 1, vijay, gv prakashkumar, amy jackson