நந்திவர்மன் - விமர்சனம்
01 Jan 2024
பெருமாள் வரதன் இயக்கத்தில், ஜெரால்டு பெலிக்ஸ் இசையமைப்பில், சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தொல்லியல் துறை சார்ந்த த்ரில்லர் கதைகளைப் பார்ப்பதில் தனி சுவாரசியம் இருக்கும். அப்படியான சில படங்கள்தான் தமிழ் சினிமாவில் வருகிறது. இயக்குனர் பெருமாள் வரதன் சுவாரசியமான ஒரு கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். உருவாக்கத்தில் மட்டும் இன்னும் தரத்தை உயர்த்தியிருக்க வேண்டும்.
பல்லவர்கள் ஆண்ட அனுமந்தபுரம் என்ற இடத்தில் ஒரு கோவில் மண்ணில் புதைந்திருக்கிறது, அதில் புதையல், மர்மமமான சக்தி வாய்ந்த வாள் ஆகியவை இருப்பதைக் கண்டுபிடிக்க ஆய்வுக்குழு ஒன்று செல்கிறது. தொல்லியல் துறை மாணவ, மாணவிகளுடன் தலைமையேற்று செல்கிறார் பேராசிரியர் போஸ் வெங்கட். ஆய்வின் போது இரண்டு மாணவர்கள் மர்மமாக கொல்லப்படுகிறார்கள். அந்த ஊருக்கு மாற்றலாகி வரும் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி, அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். கொலைக்கான காரணங்கள் என்ன, கோவிலைக் கண்டுபிடித்தார்களா, புதையல் கிடைத்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சப் இன்ஸ்பெக்டராக விறைப்புடன் நடித்திருக்கிறார் சுரேஷ் ரவி. அவரது காதலியாக ஆராய்ச்சி மாணவியாக ஆஷா வெங்கடேஷும் நிறைவாகவே நடித்திருக்கிறார். போஸ் வெங்கட் கதாபாத்திரம் வில்லன் போல சித்தரிக்கப்பட்டு பின், அவர் வில்லனல்ல, வேறு ஒருவர்தான் வில்லன் என்ற சஸ்பென்ஸ் வைக்கப்பட்டுள்ளது.
அந்த கிராமம், ஆராய்ச்சி செய்யும் இடம் ஆகியவற்றின் காட்சிகளில் கொஞ்சம் பரபரப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர். படத்திற்கு அதிகப்படியான பட்ஜெட் இருந்து மேக்கிங்கில் பிரம்மாண்டத்தைக் கூட்டியிருந்தால் பேசப்படக் கூடிய படமாக அமைந்திருக்கும்.
Tags: nandhivarman