மதிமாறன் - விமர்சனம்

01 Jan 2024

மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையமைப்பில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.


உருவ அமைப்பை வைத்து கிண்டல், கேலி செய்வது கூடாது என்பதை தனது முதல் படத்திலேயே அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார் இயக்குனர். அவர்களிடத்திலும் தனித் திறமை உண்டு. அவர்களுக்கும் சரியான வாய்ப்புகளைக் கொண்டுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 

கிராமத்தில் வசிக்கும் தபால்காரரான எம்எஸ் பாஸ்கருக்கு வெங்கட் செங்குட்டுவன், இவானா ஆகியோர் இரட்டைக் குழந்தைகள். வெங்கட் செங்குட்டுவனுக்கு உயரம் அதிகமில்லாத குறைபாடு இருக்கிறது. அவரைப் பலரும் கேலி செய்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி படிப்பில் திறமைசாலி. தம்பி வெங்கட் மீது அதிக பாசம் வைத்துள்ளவர் இவானா. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது இவானா, கல்லூரி பேராசிரியர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடி விடுகிறார். அந்த அவமானம் தாங்காமல் எம்எஸ் பாஸ்கர் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்கிறார். அக்காவைத் தேடி சென்னை செல்கிறார் வெங்கட். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

 

அறிமுக நடிகர் போல இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். மற்றவர்களின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் லேசான தாழ்வு மனப்பான்மையுடன் வருத்தமிருந்தாலும் மற்றவர்களைப் போல சாதிக்க நினைக்கிறார். சமயம் கிடைக்கும் போது அவரது திறமையை மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்கிறார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திற்குப் பிறகு உயரம் குறைந்த ஒருவரின் உணர்வைச் சொல்லியிருக்கும் படம் இது.

 

‘லவ் டுடே’ இவானா அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தம்பி மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் உணர்வுபூர்வமாய் நடித்திருக்கிறார். வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி காலத்து காதலியாக,  பின்னர் சென்னையில் சப் இன்ஸ்பெக்டராக பொருத்தமான நடிப்பில் கவர்கிறார் ஆராத்யா.

 

சில காட்சிகளில் வந்தாலும் கமிஷனராக ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டராக சுதர்ஷன் கோவிந்த், வெங்கட் அப்பாவாக எம்எஸ் பாஸ்கர் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

 

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை உணர்வுபூர்வ காட்சிகளில் முத்திரை பதிக்கிறது. 

 

இடைவேளைக்கு முன் குடும்பப் படமாகவும், இடைவேளைக்குப் பின் த்ரில்லர் படமாகவும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். த்ரில்லர் பகுதிகளை விட குடும்பப் பகுதிகள் சிறப்பாய் அமைந்துள்ளன. கதாபாத்திரங்களின் அமைப்பும், பொருத்தமான நடிப்பும் படத்தை ரசிக்க வைக்கிறது.

Tags: mathimaran

Share via: