நவயுக கண்ணகி - விமர்சனம்

26 Dec 2023

கிரண் துரைராஜ் இயக்கத்தில், கெவின் பின்னணி இசையில், பவித்ரா, விமல்குமார், டென்சல் ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் ‘ஷார்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம்.


சாதிக் கொலையை மையமாக வைத்து, வேலூர் பின்னணியில், சினிமாத்தனமில்லாத நடிகர்களை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிரண். 

 

பவித்ரா, டென்சல் இருவருக்கும் பெரியோர் பார்த்து வைத்து திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், கணவன் அருகில் செல்வதையே தவிர்க்கிறார் பவித்ரா. கணவன் டென்சல் கட்டாயப்படுத்திக் கேட்க, தனக்கும் வேறு சாதியைச் சேர்ந்த விமல்குமாருக்கும் இடையே இருந்த காதலைப் பிரித்து அவரை சாதி வெறி பிடித்த அப்பா கொன்றது பற்றி சொல்கிறார். பவித்ராவும் டாக்டர், விமல்குமாரும் டாக்டர், இருந்தாலும் சாதிதானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற கோபத்தில் இருக்கிறார் பவித்ரா. திருமணத்திற்குப் பின்பு கணவர் டென்சல் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், பவித்ரா கர்ப்பமடைகிறார். தனது மனைவியை இதுவரை தொடாத டென்சலுக்கு அதிர்ச்சியாகிறது. காதலன் இறந்து விட்ட நிலையில் பவித்ரா எப்படி கர்ப்பமானார், பின் பவித்ரா என்ன செய்தார் என்பதுதான் மீதிக் கதை.

 

காதலன் இறந்தாலும் காதலனின் கருவை வயிற்றில் சுமக்க வேண்டும் என்ற புரட்சிகரமான ஒரு முடிவை பவித்ரா எடுத்ததால்தான் இந்தப் படத்தின் பெயர் ‘நவயுக கண்ணகி’. 

 

எத்தனையோ சாதிப் படங்கள் தமிழ் சினிமாவில் வந்தாயிற்று. இந்த இயக்குனரும் அந்த சாதி வேற்றுமையை விட்டுவைக்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இரண்டு சாதியினரை இந்தப் படத்தில் கையாண்டியிருக்கிறார். சில வசனங்கள் இரண்டு சாதியினரையும் நேரடியாகவே தாக்குகின்றன. ஓடிடி என்பதால் சென்சார் கிடையாது என்ற தைரியத்தில் அவற்றை வைத்திருக்கிறார். 

 

புதியவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதையின் நாயகியாக பவித்ரா. காதலன் விமல்குமார் மீது தீவிரமான காதலில் இருக்கிறார். எப்படியாவது காதலனைக் கைபிடிக்க வேண்டும் என நினைத்து தோற்றுப் போகிறார். காதலனை மறக்க முடியாமல் அவர் எடுக்கும் முடிவு தமிழ் சினிமாவில் இதுவரை வராத ஒன்று. இப்படியெல்லாம் கூட நடக்குமா என அதிர்ச்சியடைய வைக்கிறார்கள்.

 

சாதி வித்தியாசம் என்பதால் டாக்டராக இருந்தும், மனதாரக் காதலித்த காதலியை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் கொல்லப்படுகிறார் விமல்குமார். பெரிய இடம், டாக்டர் பெண் என பவித்ரா பற்றிய முன் வாழ்க்கைத் தெரியாமல் அவரைத் திருமணம் செய்து கொண்டாலும் குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கிறார் டென்சல் ஜார்ஜ். இருவருமே ஒரு விதத்தில் அப்பாவிகள் தான். சாதி வெறி பிடித்த அப்பாவாக தென்பாண்டியன், கிராமத்து கதைகளுக்குக் கிடைத்துள்ள புதிய அப்பா நடிகர்.

 

படத்தின் மேக்கிங் சுமார் ரகமாக உள்ளது. ஒரு திரைப்படம் பார்ப்பதற்கான உணர்வில் இல்லாமல் ஒரு குறும்படத்தைப் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது. டெக்னிக்கலாக படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியிருக்க வேண்டும்.

Tags: navayuga kannagi

Share via: