வலிமை – விமர்சனம்

25 Feb 2022

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு படத்தின் அப்டேட்டைப் பற்றி ரசிகர்கள் அதிக ஆர்வம் கொண்டு கேட்ட திரைப்படம் ‘வலிமை’. அவ்வளவு ஆர்வத்துடன் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கான படம் இது.

சில காரணங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களின் பாசத்தைப் புரிந்து கொண்டு சரியான வழியில் நடக்க வேண்டும் என்ற ஆலோசனையை சொல்லியிருக்கிறது அஜித், இயக்குனர் வினோத் கூட்டணி.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு பார்க்காத ‘பைக் சேசிங்’ காட்சிகள் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. படத்தின் மிகப் பெரும் ஹைலைட்டும் இதுதான். முழு படத்தையும் தனது ஸ்டைலிஷ் நடிப்பால் தாங்கி நிற்கிறார் அஜித்.

சென்னையில் செயின் திருட்டுக்கள், சில கொலைக் குற்றங்கள் அடிக்க நடக்கிறது. அவற்றைத் தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மதுரையில் உதவி கமிஷனராக இருக்கும் அஜித்தை சென்னைக்கு மாற்றி விசாரிக்கும் பொறுப்பைக் கொடுக்கிறார்கள். ‘பிளாக் வெப்’ என அழைக்கப்படும் குற்றவாளிகளுக்கான மாற்று இணையத் தொடர்பில் செயல்படும் கார்த்திகேயா தலைமையிலான அந்த திருட்டு, போதைப் பொருள் கடத்தல் கும்பலை அஜித் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

அஜித் ரசிகர்களுக்கு அஜித்தைத் திரையில் பார்த்தாலே கொண்டாட்டம்தான். ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார். எதிரிகளைப் பற்றியும், இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அவரது ‘பன்ச்’ வசனங்களை தியேட்டர்களில் முழுமையாகக் கேட்க முடியாத அளவிற்கு ரசிகர்களின் ஆரவராம் அதிகமாகவே உள்ளது. பைக் சேசிங்கில் அஜித்தின் நிஜமான திறமை என்னவென்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தக் காட்சிகளில் அப்படி ஒரு பரபரப்பூட்டியிருக்கிறார் அஜித். காதல் இல்லாமல் அம்மா சென்டிமென்ட், தம்பி சென்டிமென்ட், குடும்ப சென்ட்டிமென்ட் காட்சிகளில் பெண்களையும் கவர்கிறார்.

அஜித்துடன் இணைந்து பணிபுரியும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஹுமா குரேஷி. அஜித்துக்கு இவர் ஜோடி இல்லை என்றாலும் இருவரையும் திரையில் ஒரு சேர பார்க்கும் போது ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறார்கள். 

வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. முறுக்கேறிய உடம்புடன் வில்லத்தனத்திலும் தெறிக்க விடுகிறார். மற்ற நடிகர்களில் அஜித்தின் தம்பியாக நடிக்கும் ராஜ் ஐயப்பா கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம். காவல் துறை அதிகாரிகளாக செல்வா, சுந்தர் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் யுவனின் இசையில் இடம் பெற்ற இரண்டு பாடல்களை பாதி தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை அவர் அமைக்கவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஜிப்ரான் தான் படத்திற்கு பின்னணி இசையாம். யுவனிடமே கொடுத்திருந்தால் ‘மாநாடு’ படத்தைத் தன் இசையால் மேலும் தூக்கி நிறுத்தியதைப் போல நிறுத்தியிருப்பார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மாஸ் அன்ட் கிளாஸ். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் படத்திற்காக தனது குழுவினருடன் கடுமையாக உழைத்திருக்கிறார். சேசிங் காட்சிகள் வேறு லெவலில் இருக்கின்றன.

இடைவேளை வரையிலான படம் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், சில பல எதிர்பார்க்காத டிவிஸ்ட்களுடன் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் சென்டிமென்ட் காட்சிகளுடன் நகர்வதால் ஆக்ஷன் சற்று குறைந்து மீண்டும் கிளைமாக்சில்தான் வேகமெடுக்கிறது. இடைவேளைக்குப் பிந்தைய திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Tags: valimai, ajith kumar, huma qureshi, yuvan shankar raja, ghibran

Share via: