ரஜினியின் கூலி : வெளியீட்டுக்கு முன்பே உலகளவில் சாதனை!
06 Jul 2025
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம், வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம், தமிழ் சினிமாவில் அதிக திரைகளில் வெளியாகவிருக்கும் படமாக வரலாறு படைக்கவுள்ளது.
கூலி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத், லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான Chikitu ஏற்கனவே இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கூலி திரைப்படம் தமிழ் சினிமாவில் மற்றொரு மாபெரும் சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் கிடைக்காத வகையில், கூலியின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்தின் உலகளாவிய ரசிகர் பட்டாளம், லோகேஷின் தனித்துவமான இயக்கம் மற்றும் சன் பிக்சர்ஸின் உயர்தர தயாரிப்பு ஆகியவற்றின் கூட்டு வெற்றியை பறைசாற்றுகிறது.
இந்தப் படத்தின் உலகளாவிய விநியோகத்தை புகழ்பெற்ற ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கையாளுகிறது. இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய இந்நிறுவனம், விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளிலும், ஜூனியர் என்டிஆரின் தேவாராவை 90க்கும் மேற்பட்ட நாடுகளிலும் வெளியிட்டு பெரும் பாராட்டு பெற்றுள்ளது.
கூலி திரைப்படத்தை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தயாராகி வருகிறது. இதன் மூலம், முதல் முறையாக ஒரு தமிழ் படம் உலகம் முழுவதும் இவ்வளவு பரவலாக வெளியாகவுள்ளது. கூலி வெறும் திரைப்படம் மட்டுமல்ல, ஒரு உலகளாவிய சினிமா புரட்சியாக உருவெடுக்கவுள்ளது. ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகும் இந்தப் படம், இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக அமையவுள்ளது.
Tags: coolie, rajinikanth, lokesh kanagaraj