தமிழிலும் தடம் பதிக்க ஆசைப்படும் ‘லவ் மேரேஜ்’ மீனாட்சி தினேஷ்

06 Jul 2025

மலையாள சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் புகழ்பெற்ற நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த லவ் மேரேஜ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், மீனாட்சியின் கதாபாத்திரம் விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து, பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

18+ மற்றும் இரட்டா போன்ற மலையாள படங்களில் தாக்கமிக்க கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற மீனாட்சி, தமிழில் லவ் மேரேஜ் படத்திலும் தனது ஆழமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரது இயல்பான நடிப்பும், திரையில் தோற்றமும் பலராலும் பாராட்டப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு ஒரு நம்பிக்கைக்குரிய புதுமுகமாக மீனாட்சியை உயர்த்தி கூறியுள்ளனர்.

லவ் மேரேஜ் படத்தில் பணியாற்றியது குறித்து மீனாட்சி தினேஷ் கூறும்போது,

“தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லவ் மேரேஜ் படத்தில் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவிற்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.

பல்வேறு சவால்மிக்க கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட மீனாட்சி, வழக்கமான கதாபாத்திரங்களைத் தாண்டி, வித்தியாசமான மற்றும் ஆழமான வேடங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரும் ஆர்வம் கொண்ட அவர், நடிகர் சூர்யாவின் தனித்துவமான நடிப்பிற்கு தீவிர ரசிகை என்றும், அவருடன் பணியாற்றுவது தனது கனவு என்றும் கூறியுள்ளார்.

“சூர்யா சாருடன் இணைந்து பணியாற்றுவது என் கனவு. ஒரு நாள் அது நிஜமாகும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் அவரிடமிருந்து கற்க நிறைய உள்ளது,” என்று மீனாட்சி உற்சாகமாக தெரிவித்தார்.

தென்னிந்திய சினிமாவில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் மீனாட்சி தினேஷ், தனது தெளிவான பார்வையாலும் வலுவான நடிப்பாலும் விரைவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது முத்திரையைப் பதித்த மீனாட்சி, வரும் காலங்களில் மேலும் தாக்கமிக்க கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெறுவார் என்பது உறுதி.

Tags: meenakshi dinesh, love marriage

Share via: