வீடியோ கேம் ரசிகர்களைக் கவர்ந்த ‘அன்சார்டட்’ கேம் அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

உலகைச் சுற்றி வந்த முதல் கப்பலின் கேப்டன் என அறியப்படும் போர்ச்சுகீசிய கேப்டன் ஆன மெக்கல்லன், 500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த தங்கப் புதையலும், அது பற்றிய வரைபடம் ஒன்றும் இருப்பது புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கும் சிலருக்குத் தெரிய வருகிறது. அந்தப் புதையல் தங்களது குடும்பத்திற்குச் சொந்தமானது என ஆண்டானியோ பேன்டரஸ் தேட ஆரம்பிக்கிறார். அந்தப் புதையலை டாம் ஹாலந்த், மார்க் வால்பெர்க் ஆகியோரும் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தப் புதையல் இருக்கும் இடத்தை யார் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் குட்டீஸ்களுக்கு ‘ஸ்பைடர்மேன்’ டாம் ஹாலந்த்தை நன்றாகவே தெரியும். அவர்தான் இந்தப் படத்தின் நாயகன். ‘ஸ்பைடர்மேன்’ ஆகவே பார்த்தவரை, வேறு ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது ரசிக்கும்படி இருந்தாலும் நமக்கு என்னவோ ‘ஸ்பைடர்மேன்’ஐப் பார்ப்பது போலவே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கிளைமாக்ஸ் காட்சிகளில் இவரும் வால்பெர்க்கும் இணைந்து மிரட்டியிருக்கிறார்கள்.

மற்றொரு கதாநாயகனாக வால்பெர்க் அதிக ஆக்ஷன்கள் செய்யவில்லை என்றாலும், தமிழ் டப்பிங்கில் அவருடைய வசனங்களை மிகவும் சுவாரசியமாக வைத்து ரசிக்க வைத்துள்ளார்கள்.

ஹாலந்த், வால்பெர்க் ஆகியோருடன் இணைந்து புதையலைத் தேடும் பெண்ணாக சோபியா அலி. திடீரென அவர்கள் இருவருக்கும் துரோகம் இழைத்து வில்லனுக்காக வந்தவர்தான் அவர் என்பது நாம் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை.

ஆண்டானியோ பேன்டரஸ் தான் படத்தின் முதல் வில்லன். அவரது கூட்டத்தில் இருக்கும் டாட்டி கேப்ரியல்லி பின்னர் அடுத்த வில்லியாக மாறிவிடுகிறார்.

புதையலைத் தேடி நகரத்தின் அடிப்பகுதிக்குள் நுழையும் இடங்கள் பிரம்மாண்ட அரங்காக அமைக்கப்பட்டுத்தான் படமாக்கப்பட்டிருக்கும். அவை உண்மையான இடங்களைப் போலவே காட்சியளிக்கின்றன. 

இடைவேளைக்குப் பின்னர் கடல் பயணம் என கதை நகர்கிறது. கிளைமாக்ஸ் விமான சண்டைக் காட்சிகள் மிரட்டலோ மிரட்டல். அதை ரசிப்பதற்காக ஆரம்பத்திலிருந்து வரும் வெறும் வசனக் காட்சிகள் சிலவற்றை நாம் பொறுமையாகக் கடந்துதான் ஆக வேண்டும்.

ரூபன் பிலிஷர் இயக்கத்தில் முழுமையான ஆக்ஷன் படமாக இல்லையென்றாலும் ஒரு அட்வென்சர் படமாக அமைந்து ரசிக்க வைக்கிறது. கொஞ்சம் பொறுமையாக நகர்ந்தாலும் சுவாரசியமாக ரசிக்க முடிகிறது.